Published : 12 May 2023 05:49 AM
Last Updated : 12 May 2023 05:49 AM
சேலம்: ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு மாயமான், மண் குதிரை போன்றது. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. தமிழக அமைச்சரவை மாற்றமே இதற்கு சான்று என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாயமான் - மண்குதிரை: ஓபிஎஸ் - டிடிவி தினகரன் ஒன்றிணைந்திருப்பது, மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போன்றது. பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியம் சேர்வதால் எவ்விதப் பலனுமில்லை. இவ்வகையில்தான் இவர்களின் இணைப்பு உள்ளது.
‘டிடிவி தினகரன் ஒரு துரோகி’ என ஓபிஎஸ் கூறி வந்தார். அதேபோல் டிடிவி தினகரன், ‘ஓபிஎஸ்-ஐ துரோகி’ என சாடினார். தற்போது, இவ்விரு துரோகிகளும் ஒன்றிணைந்து ஒரு அணியை உருவாக்கியுள்ளனர். டிடிவி தினகரனின் கூடாரம் காலி ஆகிவிட்டது, அதில் ஒட்டகம் புகுந்த நிலையாக தற்போது ஓபிஎஸ் புகுந்துள்ளார்.
ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பை பண்ருட்டி ராமச்சந்திரன் பெருமையாகப் பேசியுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரனைப் பொறுத்தவரை அவர் சார்ந்திருந்த எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. அவரை எம்ஜிஆரே கண்டித்துள்ளார். ஜெயலலிதா இருக்கும்போதே அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர். பாமக, தேமுதிக என பல கட்சிக்கு சென்றவர். அவர் எங்கு சென்றாலும் அந்த கட்சி அழிந்துவிடும்.
கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்கச் சென்ற ஓபிஎஸ், ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்துப் பேசியுள்ளார். திமுக-வுக்கு ‘பி’டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என்பது இப்போது உண்மையாகிவிட்டது.
இரண்டாண்டு திமுக ஆட்சியில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக ஆடியோ வெளியானது. இதனால்தான் அமைச்சரவையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். அனைத்துத் துறையிலும் ஊழல் நடந்திருக்கிறது. இன்னும் நிறைய ஆடியோ வரும் என்கின்றனர்.
என்னை அரசியல்ரீதியாக எதுவும் செய்ய முடியாததால், மிலானி என்ற திமுகவைச் சேர்ந்தவர் மூலமாக வேட்பு மனுவில் சொத்துகளை குறைத்து காட்டியதாக குற்றம் சாட்டியுள்ளனர். என்ன இருக்கிறதோ அதைத்தான் காட்டியுள்ளேன். நான் எந்த தொழிலும் செய்யவில்லை. விவசாயம் மட்டும்தான் செய்கிறேன். எந்த சொத்தையும் மறைக்கவில்லை. இது முழுக்க முழுக்க விதிமீறல் வழக்கு. எனவே, இதனை சட்டப்படி சந்திப்பேன்.
ஓபிஎஸ் அணியிலுள்ள வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், பிரபாகரன் ஆகியோர் வந்தால் அவர்களை கட்சியில் இணைத்துக்கொள்வது என்பது சாத்தியமில்லை. கட்சிக்கு ஊறுவிளைவித்தவர்களை எப்போதும் கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம். தொண்டர்கள் என்ன கருதுகிறார்களோ, அதைத்தான் கட்சி செய்யும். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் மூலம் எங்களுக்கு அதிமுக கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT