Published : 11 May 2023 05:58 PM
Last Updated : 11 May 2023 05:58 PM

திட்ட அறிக்கை திருத்தங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றுக: மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: திட்ட அறிக்கையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கே.கே.ஆர். நகர் குடியிருப்பு வாரிய நலச் சங்கத்தின் செயலாளர் லூர்துராஜ் தாக்கல் செய்த மனுவில், "சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லுார் வரையிலான வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை மற்றும் மூலக்கடைக்கு இடையில், தபால் பெட்டி நிறுத்தம் அமைக்க 2018ல் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது தபால் பெட்டி நிறுத்தத்தை நீக்கிவிட்டு, முராரி மருத்துவமனை நிறுத்தம் அமைக்கும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மாதவரம் தபால்பெட்டி மெட்ரோ நிலையம் இல்லாவிட்டால் குடியிருப்புவாசிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவர். இரவு நேரங்களில் ஆட்டோக்கள் எதுவும் கிடைக்காமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும். தபால் பெட்டி மெட்ரோ ரயில் நிலையம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும், அலுவலகம், பள்ளி மற்றும் வீட்டிற்கு செல்லும் நேரத்தை குறைக்கும் வகையிலும் இருக்கும்.

தபால்பெட்டி மெட்ரோ ரயில் நிலையத்தை கைவிடுவதற்கு முன்பாக முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. எனவே, தபால் பெட்டி மெட்ரோ நிலையம் அமைக்காமல், தங்களது குடியிருப்புகளின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்கும்படி உத்தரவிட முடியாது எனக்கூறி, திருத்தப்பட்ட சீரமைப்பு வரைபடத்தை 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, திருத்தப்பட்ட சீரமைப்பு வரைபடத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீரமைப்பு வரைபடத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாதவரம் பால்பண்ணை முதல் முராரி மருத்துவமனைக்கு இடைப்பட்ட தூரம் 1.5 கி.மீ என உள்ள நிலையில் தபால்பெட்டி மெட்ரோ நிலையம் அமைக்கும் பணி நிறுத்தபட்டதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x