Published : 11 May 2023 05:24 PM
Last Updated : 11 May 2023 05:24 PM
கும்பகோணம்: தமிழகத்திலுள்ள சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர அரசு உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட தகவல் உரிமை அறியும் சட்ட ஆர்வலர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தமிழக முதல்வருக்கு, தஞ்சாவூர் மாவட்ட தகவல் உரிமை அறியும் சட்ட ஆர்வலர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் இ.இளங்கோவன் அனுப்பியுள்ள மனுவில், “தமிழகத்திலுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்ட, தவழும் மாற்றுத்திறனாளிகள், தண்டுவடம், தசை சிதைவு, தொழுநோய் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளான சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் ஊக்கத் தொகையைத் தமிழக அரசு மாதந்தோறும் 1-ம் தேதி வழங்குகின்றது.
ஆனால், இந்த மாதம் 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையான ரூ. 2 ஆயிரம் வரை வழங்கப்பட வில்லை.
இது குறித்து பல்வேறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட போது, இதுவரை நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு இன்று வரை நிதி ஒதுக்கீடு ஆணை பெறப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.
எனவே, மிகவும் சிரமப்படும் அவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை கிடைப்பதற்கும், இனி வரும் மாதங்களில் காலதாமதம் ஏற்படாத வகையில் உதவித் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT