Published : 11 Oct 2017 02:50 PM
Last Updated : 11 Oct 2017 02:50 PM

கட்டாஞ்சி மலையில் அச்சுறுத்தும் வழிப்பறிக் கொள்ளையர்கள்: பாதுகாப்பு நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்திலிருந்து மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கட்டாஞ்சி மலை.

கோவையின் முதலாம், இரண்டாம் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு வரும் ராட்சஷ குழாய்கள் இந்த மலையை குடைந்து, சுரங்கம் அமைத்தே போடப்பட்டுள்ளது. இந்த மலை உச்சியில் பாண்டியர் காலத்திய புராதன கோயிலான தண்டிகை அரங்கநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகள் என்பது அரங்கநாதனுக்கு கொண்டாட்டமான நாள் என்பதால் அந்த நாட்களில் திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற வெளியூர்களிலிருந்தெல்லாம் இங்கே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

ஆளரவமற்றே காணும் இந்த கட்டாஞ்சி மலைப்பாதையில் 3 வருடங்களுக்கு முன்புதான் சாலை அமைக்கப்பட்டது. இந்த மலைக்கு கிழக்கே அடிவாரப்பகுதியில் உள்ள செல்வபுரம் கிராமம் பெரிய நாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கும், வடமேற்கே அமைந்துள்ள தாயனூர், வெள்ளியங்காடு பகுதிகள் காரமடை போலீஸ் எல்லைக்குள்ளும் வருகின்றன. சாலை போடப்படுவதற்கு முன்பு இந்த பாதையில் பஸ் போக்குவரத்து எதுவும் இல்லை.

மலைக்கு இந்த பக்கம் பெரிய நாயக்கன்பாளைத்திலிருந்து செல்வபுரம் கிராமம் வரை மினி பஸ் மட்டும் சென்று வந்தது. இந்த பாதை கோவையிலிருந்து வெள்ளியங்காடு, மேட்டுப்பாளையம், வனபத்திரகாளியம்மன் கோயில், தேக்கம்பட்டி, மஞ்சூர், தோலம்பாளையம், கோபனாரி போன்ற கிராமங்களுக்கு செல்பவர்களுக்கு சுருக்கமான வழி (முன்பு காரமடையை சுற்றி 10 கிலோமீட்டர் கூடுதலாக பயணிக்க வேண்டியிருந்தது) என்பதால் தற்போது இந்த சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்வது அதிகரித்துள்ளது. தவிர இந்த சாலையில் கேரள எல்லை அத்திக்கடவு- கூடப்பட்டி வரை ஒரு பேருந்து போக்குவரத்தும் விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த மலை அடிவாரப்பகுதிகளில் சமீப காலமாக வழிப்பறி கொள்ளை அதிகரித்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

சில வாரங்களுக்கு முன்பு அடிவாரப்பகுதியான செல்வபுரம் பகுதியில் ஒரு கும்பல் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்திருக்கிறது. அவரிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை மிரட்டி பிடுங்கியிருக்கிறது. அந்த கும்பலுடன் அவர் போராட, அவரை சட்டை, உடம்பில் பிளேடு போட்டு கண்டமேனிக்கு கீறியிருக்கிறது. அவர் ரத்த விளாறியுடன் அடுத்ததாக உள்ள காளம்பாளையம் வந்து அங்குள்ள பொதுமக்களிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். பொதுமக்கள் அங்கு சென்று தேட வழிப்பறி கொள்ளையர்கள் யாரும் கிடைக்கவில்லை.

இந்த சம்பவத்திற்கு சில நாட்கள் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை இதே செல்வபுரம் அடி வாரத்தில் வழிமறித்துள்ளது. அவர் வண்டி சாவியை முதலில் எடுத்துக் கொண்டு, அந்த இளைஞரை அடித்து துவம்சித்திருக்கிறது. அவரிடம் இருந்த பணம், செயின் பறித்துக் கொண்டு தப்பித்திருக்கிறது. இது போல கடந்த சில மாதங்களாகவே வழிப்பறி கொள்ளைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், அதில் ஒரு சிலரே போலீஸில் புகார் தெரிவிப்பதாகவும், போலீஸூம் புகார் பதிவு செய்வதோடு, சரி நடவடிக்கை ஏதும் இருப்பதில்லை என்றும் தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள்.

இதுகுறித்து தாயனூரை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறுகையில், ''இங்கே 6 பேர் மற்றும் 2 பேர் கொண்ட வழிப்பறிக் கும்பல் இருப்பதாக தெரிகிறது. அவர்கள் இயக்கமே மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை உள்ளது. பொதுவாகவே இந்த கட்டாஞ்சி மலையில் செல்வபுரம் தொடங்கி காளம்பாளையம், தாயனூர் வரை உள்ள மலைப்பாதையில் (6 கிலோமீட்டர்) மக்கள் நடமாட்டமே இருக்காது. அதில் மாலை நேரத்தில் சொல்லவே வேண்டாம். அதைத்தான் இந்த கொள்ளை கும்பல் வசதியாக பயன்படுத்திக் கொள்கிறது. இப்படி தொடர் வழிப்பறியினால் இந்த சுற்றுவட்டார கிராம மக்கள் மாலை மற்றம் இரவு நேரங்களில் வெளியே வரக்கூட பயப்படுகிறார்கள். அந்த கொள்ளையர்கள் இருசக்கர வாகனங்களிலும் ஜீப்பிலும் வருவதாகவே தெரிகிறது.

இப்படி சாலையில் வழிப்பறியில் ஈடுபடுபவர்கள் அடுத்தது வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்க மாட்டார்கள் என என்ன நிச்சயம்? இது புரட்டாசி மாதம். கட்டாஞ்சி பெருமாள் கோயிலுக்கு வெளியூரிலிருந்து நிறைய பேர் வருகிறார்கள். அவர்கள் இந்த விஷயம் தெரியாமல் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் மாட்டிக் கொள்ளவும் வாய்ப்பு அதிகம். பேருந்தை பொறுத்தவரை மூன்று முறை வருகிறது. அதில் ஒரு ட்ரிப் மேட்டுப்பாளையம் செல்கிறது. இந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அதிலும் தன் செயலை காட்ட மாட்டார்கள் என என்ன நிச்சயம். எனவே இப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தும் விதமாக தினசரி போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்!'' என்று தெரிவித்தனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x