Published : 11 May 2023 04:14 PM
Last Updated : 11 May 2023 04:14 PM

சென்னையில் 2.79 லட்சம் கட்டடங்களை மறு அளவீடு செய்யும் பணி தொடக்கம்: கூடுதலாக சொத்து வரி கிடைக்க வாய்ப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை | கோப்புப் படம்

சென்னை: 2.79 லட்சம் கட்டடங்களை மறு அளவீடு செய்யும் பணி நிறைவு பெற்ற சென்னை மாநகராட்சிக்கு கூடுதலாக சொத்து வரி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சியில், சொத்து வரியை கணக்கீடு செய்ய, புவிசார் தகவல் வரைப்படம் தயாரிக்கப்பட்டது. ‘ட்ரோன்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குடியிருப்பு வீடுகள், வணிக வளாகங்கள், மத்திய, மாநில அரசு கட்டடங்களின் பரப்பளவு கணக்கீடு செய்யப்பட்டது.

இதில், 3.10 லட்சம் கட்டடங்களில் சொத்து வரி செலுத்துவதில் மாறுபாடு இருந்தது கண்டறியப்பட்டது. அதில், 30,899 கட்டடங்களை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் அளவீடு செய்து உறுதி செய்தனர். அவர்களுக்கு, சரியான சொத்துவரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மாநகராட்சி பணியாளர்களின் பணிச்சுமையால், காலவிரயம் ஏற்படுவதை தவிர்க்க, மீதமுள்ள 2.79 லட்சம் கட்டடங்கள் அளவீடு செய்யும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐந்து கோடி ரூபாய் மதிப்பில், பிரைம் மெரிடீயன் சர்வேஸ் பிரைவேட் லிமிடெட், அருள் நம்பி இன்ஜினியரிங் கன்ஸல்டன்ஸி, அரசு அசோசியேட்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு மாறுபாடு உள்ள கட்டடங்கள் குறித்த விவரங்களை மண்டல வாரியாக மாநகராட்சி பிரித்து வழங்கியுள்ளது.இந்த, மாறுப்பட்ட கட்டடங்கள் குறித்த விவரங்களை, சென்னை மாநகராட்சி https://chennaicorporation.gov.in/gcc/pdf/Assessor.pdf என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. வார்டு, முகவரி, சொத்து வரி ‘பில்’ உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,"சென்னை மாநகராட்சியின் சொத்து வரி மாறுபாடு தொடர்பாக, சொத்து உரிமையாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஏப்., மாதம் துவங்கி ஜூலை மாதம் வரை மேற்கொள்ளப்படும் மறுமதிப்பீடு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி மறுமதிப்பீடு பணிகள் ஒன்பது மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்து, மறுமதிப்பீடு வாயிலாக மாநகராட்சிக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறோம்." இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x