Published : 11 May 2023 03:43 PM
Last Updated : 11 May 2023 03:43 PM
சென்னை: சென்னையில் பல இடங்களிலும் பழைய சாலையை அகழ்ந்து எடுத்த பிறகு பல நாட்களாகியும் புதிய சாலை பணியை தொடங்காமல் உள்ள காரணத்தால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான பாதையில் வாகனத்தை இயக்கும் சூழலுக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித்திட்டத்தின்கீழ் ரூ.29.71 கோடி மதிப்பீட்டில் 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.39.39 கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோ மீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ரூ.124.71 கோடி மதிப்பீட்டில் 204.82 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் உட்பட 1,157 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சாலைப்பணிகளை மேற்கொள்ளும்போது, பழைய சாலைகளை அகழ்ந்து எடுத்துவிட்டு புதிய சாலைகள் அமைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில், பல நாட்கள் புதிய சாலைகள் அமைக்காமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில்,"சென்னையில் தெருக்களின் உட்பகுதிகளில் உள்ள சாலைகளில் புதிய சாலைகள் அமைக்க பழைய சாலைகளை தோண்டி எடுக்கிறார்கள். இதன்பிறகு, பல நாட்கள் புதிய சாலைகள் அமைப்பது இல்லை. அந்த பகுதியில் வசிக்கும் நாங்கள் தினசரி தோண்டி எடுத்த சாலையில் தான் செல்ல வேண்டியது.
காலை மற்றும் மாலையில் குழந்தைகள் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போதும், முக்கிய பணிகளுக்கு செல்லும் போதும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்கும் நிலை தான் உள்ளது. குறைவான வேகத்தில் சென்றால் கூட, சில நேரங்களில் தடுக்கி விழும் நிலை ஏற்படுகிறது. எனவே உரிய நேரத்தில் புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பழைய சாலையை அகழ்ந்து எடுத்த மூன்று நாட்களுக்குள், புதிய சாலை அமைக்கப்பட வேண்டும். பழைய சாலை அகழ்ந்து எடுக்கப்பட்ட பிறகு ஐந்து நாட்கள் பின்னரும் புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்காவிட்டால், அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.
தினசரி ரூ.5000 வீதம் பணிகள் முடியும் வரை அபராதம் விதிக்கப்படும். இதன்படி 79 வார்டில் ஒரு ஒப்பந்ததாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பல்வேறு மண்டலங்களில் 10 க்கு மேற்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த நடவடிக்கை தொடரும்." இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT