Published : 11 May 2023 03:27 PM
Last Updated : 11 May 2023 03:27 PM
சென்னை: எந்தவொரு புகையிலை தயாரிப்பும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டால், அதற்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 'ஹான்ஸ்' புகையிலைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த ஏ.ஆர்.பச்சாவட் என்ற வணிக நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், "தங்களது நிறுவனம் 'ஹான்ஸ்' குட்கா பொருளை இறக்குமதி செய்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விற்பனை செய்வது வருகிறது. 'ஹான்ஸ்' மென்று திண்ணும் வகையிலான பொருள் தான். இதற்கு உரிய வரி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் 'ஹான்ஸ்' தடை செய்யப்பட்ட பொருள் என்றுகூறி பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். எனவே, இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். இதை விற்பனை செய்வது சட்டபூர்வமானது என்பதால் உணவு பாதுகாப்பு சட்டம் இதற்கு பொருந்தாது என்று அறிவிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஹான்ஸில் 1.8 சதவீதம் நிகோடின் கலந்திருக்கிறது. இது பொதுமக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். எனவே, அதை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது. மேலும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது" என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பொது மக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை தடை செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் தடை விதிக்கும் முன்பு உரிய மதிப்பீடு மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், தொழில் அல்லது வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமை. இருந்தாலும், அந்த உரிமையானது அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
பொது சுகாதாரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால், குடிமகனின் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அரசு கடமைப்பட்டுள்ளது. மேலும் எந்தவொரு புகையிலை தயாரிப்பும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டால், அரசு தடை விதிப்பது நியாயமானதுதான். எனவே ஹான்ஸ்க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT