Published : 11 May 2023 06:13 AM
Last Updated : 11 May 2023 06:13 AM

வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு தனி சட்டம் - தமிழக மகளிர் ஆணைய தலைவர் வலியுறுத்தல்

சென்னை: வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் தனி சட்டம் வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் எஸ்.ஏ.குமாரி தெரிவித்தார்.

தமிழக மாநில மகளிர் ஆணையம் மற்றும் தமிழக வீட்டுவேலை தொழிலாளர் நல அறக்கட்டளை இணைந்து, வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான மாநில அளவிலான மாநாடு சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் மாநில மகளிர் ஆணைய தலைவர் எஸ்.ஏ.குமாரி பேசியதாவது:

பாதுகாக்க சட்டம் இல்லை: விட்டுவேலை தொழிலாளர்கள் பல மணி நேரம் வேலை செய்தாலும், அவர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதில்லை. உயர்ந்து வரும் விலைவாசியில் அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பலர் குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக கந்து வட்டிக்கு கடன் வாங்கி கடனாளி ஆகின்றனர்.

நமது நாட்டில் இவர்களைப் பாதுகாக்க சரியான சட்டங்கள் இல்லை. பலவிதமான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இவர்களுக்கென தனி சட்டங்கள் இருந்தால், இவர்களைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் கோரிக்கை: இக்கூட்டத்தில் பங்கேற்ற வீட்டுவேலை தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டு வேலை தொழிலாளர்கள் உள்ளனர். 2007-ம் ஆண்டு தனி வாரியம் அமைக்கப்பட்டது. சென்னையில் பெரும்பாக்கம், படப்பை, நாவலூர், கண்ணகிநகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான வீட்டுவேலை தொழிலாளர்கள் இருக்கின்றனர். முதலில் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம் ரூ.100: வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் தனி சட்டம் வேண்டும். வார விடுமுறை, ஊதியஉயர்வு மற்றும் வீட்டுவேலை தொழிலாளர் நல வாரியத்துக்கென தனிகுழு அமைக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு தற்போது இருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.100 என உயர்த்த வேண்டும்.

வீட்டுவேலை தொழிலாளர் நலவாரியம் சிறப்பாக செயல்பட, வீட்டுவரியில் இருந்து ஒரு சதவீதம் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x