Published : 11 May 2023 06:49 AM
Last Updated : 11 May 2023 06:49 AM
கோவை: கோவையில் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 25 டன் மாம்பழங்கள், சாத்துக்குடி ஆகியவற்றை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 8 குழுவினர் கோவை மாநகரில் உள்ள வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதி, கருப்பண கவுண்டர் வீதி, முத்து விநாயகர் கோயில் வீதி, தர்மராஜா கோயில் வீதி, கெம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 45 கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 16 கடை மற்றும் குடோன்களில் சிறிய ரசாயன பொட்டலங்கள் பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டிருந் ததை அலுவலர்கள் கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக டாக்டர் தமிழ் செல்வன் கூறியதாவது:
ராசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட சுமார் 22.5 டன் மாம்பழங்கள், 2.50 டன் சாத்துக்குடி என மொத்தம் 25 டன் பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி குப்பைக் கிடங்கில் உரம் தயாரிக்க கொட்டி அழிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.12.50 லட்சம்.
இதுதொடர்பாக 16 பழக்கடை மற்றும் குடோன்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று கார்பைட் கல், எத்திலீன் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்சினைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, பேதி போன்ற உபாதைகள் உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும், உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு உடல் வலுவிழக்கவும் வாய்ப்புள்ளது. எனவே ரசாயனங்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். இதுபோன்ற குறைபாடுகளை கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment