

சென்னை: வாழ்வில் வெற்றி பெற, மாணவர்கள் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியாகின. இதில் 94.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் நிகழ்வு சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது.
இதில், பிளஸ்-2வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாவட்ட மாணவி நந்தினி, தேர்ச்சி பெற்ற திருநங்கை ஸ்ரேயா, அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து, உயர்கல்விக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து,மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: இந்த சாதனை உங்களின்தொடக்கம்தான். வாழ்வின் நீண்டபயணம் இனிதான் தொடங்க உள்ளது. உங்களில் பட்டயக் கணக்காளர் (சிஏ) படிப்பை தேர்வு செய்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம்உள்ளது. மருத்துவராக விரும்புவோர் நீட் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற வேண்டும். ஏனெனில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க கட்டணம் குறைவு.அதேநேரம், தனியார் கல்லூரிகளில் கட்டணம் அதிகம் உள்ளது.
தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளில் சிறந்த கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. எனினும், கிளாட் நுழைவுத்தேர்வு எழுதி தேசிய அளவிலானசட்டக் கல்லூரிகளில் பயில மாணவர்கள் முயற்சிக்க வேண்டும். சட்டத் துறையில் உயர்ந்த இடத்தைஅடைவதை இலக்காகக் கொள்ள வேண்டும்.
அதேபோல, மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வுக்கும் தயாராக வேண்டும். இதற்கு கடின உழைப்பு அவசியமாகும். தற்போதைய இளைஞர்கள் செல்போனில் அதிக நேரத்தை வீணடிக்கின்றனர். செல்போன் பயன்பாட்டை மாணவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் சாதனங்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதையே,பொழுதுபோக்காக எடுத்துக் கொள்ள கூடாது. கடின உழைப்புமட்டுமே உங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். தற்போது உயர்கல்வி செல்லும் நீங்கள், எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ராஜ்பவனில் தங்கிய மாணவி: இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தென்காசி கடையநல்லூரைச் சேர்ந்த மாணவி ஷப்ரீன் இமானாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக அந்த மாணவிதனது குடும்பத்துடன் சென்னைக்கு நேற்று முன்தினம் வந்தார். அவர்கள் அனைவரும் ஆளுநரின் விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர். இது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
ஏனெனில், ஆளுநர் விருந்தினர் மாளிகையில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே தங்குவது மரபாகும். இங்கு தனி நபர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றுராஜ்பவன் அதிகாரிகள், ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.
அப்போது, ஏழைக் குடும்பத்தை சேர்ந்த மாணவி ஷப்ரீன், தமிழ் வழியில் பயின்று மாநில அளவில் நல்ல மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்காக விதிமுறைகளைத் தளர்த்துவதில் தவறில்லை என்று ஆளுநர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
முக்கியப் பிரமுகர் தங்கும் விடுதியில், தான் குடும்பத்துடன் தங்கியிருந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மாணவி ஷப்ரீன் இமானா தெரிவித்தார்.