Published : 10 May 2023 03:55 PM
Last Updated : 10 May 2023 03:55 PM
சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழக அரசின் ஒருங்கிணைந்த பயிற்சியில் சேர 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "போட்டித் தேர்வு" பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் ஊரக கடன்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 07.03.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
"நான் முதல்வன்" போட்டித் தேர்வு பிரிவானது தமிழக இளைஞர்கள் ஒன்றிய அரசுப் போட்டிகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவான சிறந்த திறன் பயிற்சி வழங்குவதையே முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையங்களான (SSC), இரயில்வே பணியாளர் தேர்வுகள் (RRB) வங்கித் தேர்வுகள் (Banking) இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் (UPSC) போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக இரயில்வே, SSC, வங்கித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி, மாவட்டந்தோறும் அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு தலா 150 மாணவர்கள் வீதம் நேரடி வகுப்பறைப் பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வழங்கப்படும்.
மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான செலவினங்களை "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் அரசே ஏற்றுக்கொள்ளும். இப்பயிற்சியின் அங்கமாக 300 மணிநேர தனி வழிகாட்டல், 100-க்கும் மேற்பட்ட மாதிரித் தேர்வுகள் ஆகியவை 100 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இத்திட்டத்திற்கான வல்லுநர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் நியமிக்கப்படுவார்கள்.
மாவட்டந்தோறும் நடைபெறவிருக்கும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2023. மேலும் பயிற்சி வகுப்புகள் 25.05.2023 அன்று தொடங்கவிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணைய தளத்தை அணுகவும். இப்பயிற்சியில் பயன்பெற ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் "http://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX" என்ற பதிவு தளத்தில் பதிவு செய்யலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT