Published : 10 May 2023 03:29 PM
Last Updated : 10 May 2023 03:29 PM

விடுதலை சிகப்பி மீதான வழக்குப்பதிவு கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்: சீமான்

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "சமூகத்தைத் துண்டாட நினைக்கும் பாசிசவாதிகளும், மதவாதிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து முற்றாய் தப்பித்துப் போகையில், சமூக அநீதிக்கு எதிராகப் பேசுவோர் மீது அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் பாய்ச்சப்படுமென்றால், நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வொன்றில், ‘மலக்குழி மரணங்கள்’ எனும் தலைப்பின் கீழ், கடவுளர்கள் மலக்குழியில் இறங்கித் துப்புரவு செய்தாலாவது அம்மரணங்கள் தடுக்கப்படுமா? என்ற பொருளில் கவிதை வாசித்த தம்பி விக்னேஸ்வரன் என்கிற விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

அறிவியல் வளர்ச்சியின் உச்சத்திலிருக்கும் 21ம் நூற்றாண்டிலும் மனிதக்கழிவை மனிதனே அள்ளும் பெருங்கொடுமையும், துப்புரவுப்பணிகளின்போது நச்சுவாயு தாக்குதலால் பணியாளர்கள் உயிரிழக்கும் கொடுந்துயரமும் இயல்பான ஒன்றாகிவிட்ட தற்காலச் சூழலில், அத்தகைய அநீதிக்கெதிராகத் தனது கற்பனைவளத்தையும், கவிதை புனையும் ஆற்றலையும் கொண்டு, கடவுளர்களைக் கதாபாத்திரங்களாக்கிக் கவிதை வடித்ததற்கு, இந்து மதத்தினை இழிவுப்படுத்திவிட்டதாகக் கூறி, வழக்கைப் பாய்ச்சிருக்கும் திமுக அரசின் நடவடிக்கை படைப்புரிமைக்கும், கருத்துச்சுதந்திரத்திற்கும் விடப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும்.

ஒட்டுமொத்த இசுலாமிய சமூகத்தையும் இழிவுப்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ எனும் திரைப்படத்தைக் காவல்துறையின் பாதுகாப்போடு தமிழ்நாடு முழுமைக்கும் திரையிடச்செய்த திமுக அரசு, மலக்குழி மரணங்கள் தொடர்பான கவிதையைக்கூட இந்து மதத்திற்கெதிரானதாகக் கட்டமைத்து, தம்பி விடுதலை சிகப்பி மீது அடக்குமுறையைப் பாய்ச்சுவதென்பது வெட்கக்கேடானது. மனுநீதிக்கு எதிரானது திராவிடமெனக் கூறிவிட்டு, இந்துத்துவத்தின் ஊதுகுழலாய் ஒலிக்கும் திமுக அரசின் செயல்பாடு அவலத்தின் உச்சம். நம்பி வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களுக்குச் செய்யும் ஜனநாயக துரோகம்.

சமூகத்தைத் துண்டாட நினைக்கும் பாசிசவாதிகளும், மதவாதிகளும் சட்டத்தின் பிடியிலிருந்து முற்றாய் தப்பித்துப் போகையில், சமூக அநீதிக்கு எதிராகப் பேசுவோர் மீது அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் பாய்ச்சப்படுமென்றால், நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா? பாஜகவின் அழுத்தத்திற்குப் பணிந்து, ஆரியத்திற்கு அடியாள் வேலைபார்ப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வேலை திட்டமா? பதில் சொல்வாரா முதல்வர் ஸ்டாலின்?

ஆகவே, ‘மலக்குழி மரணங்கள்’ எனும் சமூக அவலத்திற்கு எதிராக கவிதை வடித்திருக்கும் தம்பி விடுதலை சிகப்பி மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x