Published : 26 Oct 2017 12:05 PM
Last Updated : 26 Oct 2017 12:05 PM
மதுரை அருகே பரசுராம்பட்டி கண்மாய் ஆக்கிரமிப்பில் சிக்கி 89 ஏக்கரிலிருந்து 35 ஏக்கராக சுருங்கிப் போனது. கண்மாயில் தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு போய், 50 ஆயிரம் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை சர்வேயர் காலனி அருகே இருப்பது பரசுராம்பட்டி கண்மாய். பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இக்கண்மாயைச் சுற்றி ஆவின் நகர், சக்தி நகர், சுபாஷினி நகர், ஜிஆர். நகர், செல்வி நகர் என பல்வேறு குடியிருப்புகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
விரிவாக்கப் பகுதி என்பதால், மேலும் பல கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பகுதிக்கு ஒரே நீராதாரமாக இருப்பது பரசுராம்பட்டி கண்மாய் மட்டுமே. இக்கண்மாய் ஆயக்கட்டில் மூன்றுமாவடி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் இருந்த பலநூறு ஏக்கர் விளை நிலங்கள், 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே குடியிருப்பு பகுதிகளாக மாறின. இதனால் கண்மாய்க்கு தண்ணீரைக் கொண்டு சென்ற வாய்க்கால்கள், மழைநீர் செல்ல பயன்பட்ட சிறிய கால்வாய்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன.
மேலும் 89 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாயில் தொடர்ந்து நடந்த ஆக்கிரமிப்பு போக இன்று 35 ஏக்கர் மட்டுமே மிஞ்சியுள்ளது. கண்மாயை மேலும் ஆக்கிரமிக்கும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது. இதை முறியடித்து, கண்மாயை காப்பாற்ற இப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
600 அடிக்கு கீழ் நிலத்தடி நீர்
இதுகுறித்து குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் ஆர். கருப்பசாமி, என்.ராமச்சந்திரன், எம்.சுந்தர்ராஜ், முருகேசன் ஆகியோர் கூறியதாவது: கண்மாயில் தண்ணீர் இருந்தபோது, இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 50 அடி முதல் 100 அடிக்குள்ளாக இருந்தது.
இதை நம்பியே, இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகின. கண்மாயை ஆக்கிரமித்துள்ளது மட்டுமின்றி, கண்மாய்க்கு தண்ணீரை கொண்டுவரும் கால்வாய், வாய்க்கால்களும் அழிக்கப்பட்டு விட்டன. இதை பொதுப்பணித் துறை தடுக்க தவறி விட்டது. இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வரத்தே இல்லாமல் போய்விட்டது. கண்மாய் வறண்டே காணப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்கு கீழே சென்றுவிட்டது.
சில நேரங்களில் தண்ணீரை விலைக்கு வாங்கி சமாளிக்கிறோம். இதேநிலை நீடித்தால், நிலத்தடி நீர் மேலும் கீழே போய் குடியிருக்க தகுதி இல்லாத பகுதியாக மாறிவிடும். இதனால் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளோம்.
ரூ.49 லட்சம் ஒதுக்கீடு
சாத்தியாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேறினால் மட்டுமே, இக்கண்மாய்க்கு தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. இது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதே அதிசயம்.
கண்மாயை தூர்வாரி சீரமைக்க ரூ.49 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுபணித் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிதியை சரியாகப் பயன்படுத்தி மேலும் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் சுற்றுச் சுவரோ, கம்பி வேலியோ அமைக்கப்பட வேண்டும்.
அத்துடன், கண்ணனேந்தல் பகுதியிலிருந்து அழகர்கோவில் சாலை நோக்கி செல்லும் பாசனக் கால்வாயிலிருந்து கண்மாய்க்கு தண்ணீரைக் கொண்டு செல்ல குழாய்கள் அமைத்து இணைப்பு வழங்க வசதி உள்ளது. மழைக்காலத்தில் இக்கால்வாயில் ஏராளமான தண்ணீர் வீணாகச் செல்கிறது. இதை தடுத்து கண்மாய்க்கு திருப்பிவிட வேண்டும்.
போராட்டம் நடத்த திட்டம்
கண்மாயை மீட்கவும், தண்ணீரை நிரப்பவும் பல ஆண்டுகளாக நாங்கள் மேற்கொள்ளும் தொடர் முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. ஆட்சியர், பொதுப்பணித்துறை, மாநகராட்சி என பல்வேறு துறைகளில் மனுக்களை அளித்தும் பலன் இல்லை.
ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கடைசி முயற்சியாக வீடு, வீடாக பணம் வசூலித்து அதன் மூலம் கண்மாயை காப்பாற்ற திட்டமிட்டுள்ளோம். தற்போது மதுரை ஆட்சியரை நம்பி உள்ளோம்.
அவர் ஆக்கிரமிப்பை தடுத்து, கண்மாய்க்கு தண்ணீரை கொண்டுவரத் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு உரிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT