Published : 10 May 2023 03:14 PM
Last Updated : 10 May 2023 03:14 PM
மதுரை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முறப்பாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கை 4 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என போலீஸ் மற்றும் கீழமை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் எஸ்.எம்.ஏ.காந்திமதிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வந்தார். மணல் கொள்ளையர்கள் மீது முறப்பாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 25.4.2023-ல் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த லூர்து பிரான்சிஸை மணல் கொள்ளையர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.
லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்படுவதற்கு 13 நாட்களுக்கு முன்பு முறப்பாடு காவல் நிலையத்தில் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் மீது புகார் கொடுத்துள்ளார். போலீஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை. ஆதித்தநல்லூரில் பணிபுரிந்த போது அவரை சமூக விரோதிகள் அரிவாளால் வெட்டினர். இதையடுத்து உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கு ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருந்து இடமாறுதல் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோரிடம் லூர்து பிரான்சிஸ் மனு அளித்துள்ளார். இருப்பினும் அவரை ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட முறப்பநாட்டுக்கு மாற்றியுள்ளனர். அங்கு அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பொது இடமாறுதல் கலந்தாய்விலும் லூர்து பிரான்சிஸ் இடமாறுதல் கேட்டுள்ளார். அவரது கோரிக்கையை நிராகரித்த கோட்டாட்சியர், அதே நாளில் 2 பெண் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருந்து தூத்துக்குடி தாலுகாவுக்கு இடமாறுதல் வழங்கியுள்ளார். இதிலிருந்து இந்தக் கொலைக்கு மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் முறப்பாடு காவல் ஆய்வாளர், போலீஸாரும் காரணமாகின்றனர். இதனால் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை தூத்துக்குடி டிஎஸ்பி விசாரித்தால் நியாயம் கிடைக்காது. வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''கொலையானவரின் குடும்பத்தில் இருந்து யாரும் வழக்கு தொடரவில்லை. 3வது நபர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது தானா?'' என கேள்வி எழுப்பினர். அதற்கு வழக்கறிஞர் பினேகாஸ், ''கொலையான கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். அரசு இழப்பீடு வழங்கியுள்ளது'' என்றார். அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் வாதிடுகையில், ''விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று வருகிறது. இதனால் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டியதில்லை'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ''கிராம நிர்வாக அலுவலர் கொலை சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. வழக்கை ஐஜி நியமித்துள்ள டிஎஸ்பியே தொடர்ந்து விசாரிக்கலாம். அவர் ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். நீதித்துறை நடுவர் 3 வாரத்தில் வழக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். மாவட்ட நீதிமன்றம் தினம்தோறும் விசாரணை நடத்தி 2 மாதத்தில் விசாரணையை முடித்து தீர்ப்பளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT