Last Updated : 10 May, 2023 01:50 PM

1  

Published : 10 May 2023 01:50 PM
Last Updated : 10 May 2023 01:50 PM

புதுச்சேரியில் அரசு நிர்வாகத்தை சீர்குலைத்தவர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி - முதல்வர் ரங்கசாமி சாடல்

புதுச்சேரி: கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது புதுச்சேரி அரசு நிர்வாகத்தை சீர்குலைத்தவர் முன்னாள் முதல்வர் நாராயணசாமி என்று முதல்வர் ரங்கசாமி சாடியுள்ளார்.

புதுச்சேரி 100 அடி சாலையில் சுரங்கப்பாதை அணுகு சாலை ரூ.5 கோடியே 38 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இதேபோல அண்ணா சாலை முதல் இந்திரா காந்தி சிலை வரை மறைமலை அடிகள் சாலை புதிதாக ரூ.10 கோடியே 77 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று புதிய பேருந்து நிலையம் எதிரே நடந்தது. முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து இந்த பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்எல்ஏ-க்கள் நேரு, சம்பத், ரமேஷ், அரசு செயலர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் போது முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மழையினால் சேதமடைந்த புதுவை மாநில சாலைகள் சீரமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதன்படி சுமார் 130 கிமீ நீளமுள்ள சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நகர பகுதியில் சாலைகளை மேம்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. சாலைகள் மேம்பாட்டுக்கு அளிக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படும். எம்எல்ஏ-க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் உள்ளாட்சித் துறை மூலம் பணிகள் விரைவில் தொடங்கும். சொன்னதை செய்யும் அரசாக எங்கள் அரசு இருக்கும். சட்டப் பேரவையில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் எங்கள் அரசு விரைவில் செயல்படுத்தும்" என்று குறிப்பிட்டார்.

எந்த திட்டத்தையும் முதல்வர் ரங்கசாமி செயல்படுத்தவில்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளாரே என்று கேட்டதற்கு, "எந்த திட்டத்தை அறிவித்து செயல்படுத்தவில்லை? சட்டப்பேரவை மார்ச் 30ம் தேதி நிறைவடைந்தது. கோப்புகள் சென்று நிதி ஒதுக்கப்பட்டு அனுமதி பெற்று வர புதுவையில் எப்போதும் குறைந்தது ஓரிரு மாதங்கள் ஆகும். ஒருநாளில் கிடைக்காது. புதுவையில் ஒரு நாளில் எதற்கும் அனுமதி கிடைத்துவிடாது. அதுதான் புதுச்சேரி நிர்வாகம். இது நாராயணசாமிக்கு தெரியுதோ? தெரியலையோ? கடந்த ஆட்சியில் வெளிப்படைத் தன்மை என்ற பெயரில் நமக்கு என்ன அதிகாரம் உள்ளது? என வெளிப்படுத்தி நிர்வாகத்தையே சீர்குலைத்து வைத்துவிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கும் அரசுக்கும் என்ன அதிகாரம் உள்ளது என்பது புதுவையில் உள்ள அனைவருக்கும் தெளிவாக தெரியும். அந்த அடிப்படையில் கோப்புகள் எப்போது போகும், வரும் என தெரியும். ஓரிரு மாதம் கழித்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்று பாருங்கள். இது முதல்வராக இருந்த நாராயணசாமிக்குத் தெரியும். குடியரசுத் தலைவர் வரும் ஜூன் 6ம் தேதி புதுவைக்கு வர உள்ளார். அப்போது பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை தொடங்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று குறிப்பிட்டார்.

புதுவை அரசு காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்று கேட்டதற்கு, "தற்போது ஸ்டெனோகிராபர் தேர்வு நடந்துள்ளது. காவலர் தேர்வு ஓரிருவாரத்தில் நடக்க உள்ளது. அதன்பின் மேல்நிலை, கீழ்நிலை எழுத்தர், உதவியாளர் பணியிடங்கள் ஜூலை மாதத்திற்குள் தேர்வு நடத்தி முடிக்கப்படும். சொன்னதை செய்யும் அரசுதான் எங்களுடையது. காலி பணியிடங்களை நிரப்புவோம்" என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x