Published : 10 May 2023 04:34 AM
Last Updated : 10 May 2023 04:34 AM

பிஎஃப்ஐ தொடர்பு உடையவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை - சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் 5 பேர் கைது

சென்னை: சென்னை, மதுரை, திண்டுக்கல் உட்பட 6 இடங்களில், தடை செய்யப்பட்ட ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ (பிஎஃப்ஐ) அமைப்புடன் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ (பிஎஃப்ஐ) மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தடை விதித்தது. முக்கிய நிர்வாகிகள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னையில் திருவொற்றியூர் தாங்கல், புதிய காலனியில் வசிக்கும் அப்துல் ரசாக் (47) வீட்டில் நேற்று சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், அவரை கைது செய்தனர். இவர் பிஎஃப்ஐ வடசென்னை மாவட்ட நிர்வாகியாக இருந்தவர்.

மதுரை நெல்பேட்டையில் உள்ள பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ கட்சி முன்னாள் நிர்வாகியான வழக்கறிஞர் முகமது அப்பாஸ்(45) வீட்டிலும், தெப்பக்குளம் தமிழன் தெருவில் உள்ள முன்னாள் நிர்வாகியான வழக்கறிஞர் முகமது யூசுப்(35) வீடு மற்றும் திருமங்கலத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது. பின்னர், மதுரை வில்லாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் நடந்த சோதனையில் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளரான சாதிக் அலி(39) வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, செல்போன், சில ஆவணங்களை கைப்பற்றினர். அவரை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி திருநகரை சேர்ந்தவர் கைசர்(45). டீக்கடை நடத்துகிறார். பிஎஃப்ஐ மதுரை மண்டல தலைவராக இருந்தார். நேற்று காலை 5 என்ஐஏ அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தி, அவரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x