Published : 10 May 2023 06:10 AM
Last Updated : 10 May 2023 06:10 AM

கும்மிடிப்பூண்டியில் மிட்சுபிஷி நிறுவனத்தின் ரூ.1,891 கோடி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: மிட்சுபிஷி நிறுவனம் ரூ.1,891 கோடி முதலீட்டில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அமைக்க உள்ள குளிர்சாதன இயந்திரங்கள், காற்றழுத்த கருவிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பெண்களை அதிக அளவில் பணியமர்த்தும் நிறுவனங்களை வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

ஜப்பானின் மிட்சுபிஷி எலெக்ட்ரிக் கார்ப்பரேஷன், சிங்கப்பூரின் மிட்சுபிஷி எலெக்ட்ரிக் ஏசியா ஆகிய நிறுவனங்களின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனம் ரூ.1,891 கோடி முதலீட்டில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே குளிர்சாதன இயந்திரங்கள் (ஏ.சி.), காற்றழுத்த கருவிகள் (கம்ப்ரசர்) உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. தமிழக தொழில் துறை சார்பில்சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா பெருவயல் கிராமத்தில், மகேந்திரா ஆரிஜின்ஸ் வளாகத்தில், 52 ஏக்கர் பரப்பில் மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா நிறுவன ஆலை அமைப்பதற்கும், முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். பின்னர், அவர் பேசியதாவது:

கடந்த 2022 ஜூலையில் தமிழ்நாடு ஆராய்ச்சி, மேம்பாட்டு கொள்கை வெளியிடப்பட்டது. அதுமுதல், 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்துறையில் பல புதிய தொழில்நுட்ப மையங்களை அமைத்துள்ளன. சில நிறுவனங்கள் தங்கள் மையங்களை விரிவுபடுத்தியுள்ளன. இதன்மூலம் 1.22 லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனம்உற்பத்தி செய்யும் குளிர்சாதன பெட்டிகள், காற்றழுத்த கருவிகள் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இந்த ஆலை அமைக்கப்படுவதால், பல துணை நிறுவனங்கள் தமிழகத்துக்கு வரும்.

பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு: இத்திட்டத்தில் 60 சதவீதத்துக்கு மேல் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். அதற்கான பயிற்சி, மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பெண்களை அதிக அளவில் பணியமர்த்தும் நிறுவனங்களை வரவேற் கிறோம்.

புதிய முதலீடுகளை ஈர்ப்பதில், தேசிய அளவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தெற்காசிய அளவிலும் முதலீடுகளை ஈர்க்கும் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும் என்பதற்காக உழைத்து வருகிறோம். குறிப்பாக, ஜப்பானிய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஜப்பான் - இந்தியா முதலீடு மேம்பாட்டு கூட்டாண்மை திட்டத்தின்கீழ், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 ஜப்பானிய தொழில்நுட்ப நகரியங்களில் தமிழகத்தில் மட்டுமே 3 உள்ளன. தமிழகத்தில் அதிக அளவில் ஜப்பானியர்கள் வசிக்கின்றனர்.

முதலீடு செய்ய அழைப்பு: இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இம்மாத இறுதியில் முதலீட்டு குழுவுக்கு தலைமை தாங்கி ஜப்பான், சிங்கப்பூர் செல்கிறேன். அங்கு முன்னணி தொழில்துறை தலைவர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து, 2024 ஜனவரியில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்குமாறும், தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறும் அழைப்பு விடுக்க உள்ளேன்.

2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயித்து, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மைல்கல்லாக மிட்சுபிஷி நிறுவன முதலீடு அமைந்துள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், தொழில், வழிகாட்டி நிறுவன நிர்வாக இயக்குநர் விஷ்ணு, ஜப்பான்துணை தூதர் டாகா மசாயுகி, மிட்சுபிஷி எலெக்ட்ரிக் கார்ப்பரேஷன் குழும தலைவர் யாசுமிச்சி தாசுனோகி, மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா நிர்வாக இயக்குநர் கசுஹிகோ தமுரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 4.10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.2.73 லட்சம் கோடி மதிப்பிலான 224 முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x