Published : 10 May 2023 07:16 AM
Last Updated : 10 May 2023 07:16 AM

தமிழகத்தில் எதிரிகள் இல்லாத அரசியலை முதல்வர் செய்து வருகிறார்: அமைச்சர் துரைமுருகன் கருத்து

திருநெல்வேலி: தமிழகத்தில் எதிரிகள் இல்லாத அரசியலை முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்து வருவதாக திமுக பொதுச்செயலாளரும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார்.

திருநெல்வேலி டவுனில் நடைபெற்ற திமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் இப்போது எதிர்க்கட்சி தலைவராக ஆளுநர் தான் செயல்படுகிறார். இபிஎஸ் சிவனே என்று இருக்கிறார். ஓபிஎஸ் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. எதிரிகள் இல்லாத அரசியலை தமிழக முதல்வர் செய்து வருகிறார்.

கருணாநிதி அகில இந்திய அரசியலில் சாதித்து காட்ட 10 முதல் 15 ஆண்டுகள்வரை ஆனது. ஆனால் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று 2 ஆண்டு காலத்திலேயே இந்தியாவின் குறிப்பிடத்தக்க தலைவராக இருக்கிறார்.

எதிர்க்கட்சியான அதிமுகவும், எதிரியான பாஜகவும் நாங்கள் 2 ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை என சொல்லவில்லை. ஆனால் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று தமிழக ஆளுநர் சொல்லி வருகிறார்.

நிலுவையில் 15 மசோதாக்கள்: இந்திய அரசியலமைப்பு சட்டம் 176-ன் படி அரசு கொடுக்கும் உரையை சட்டப் பேரவையில் ஆளுநர் கட்டாயம் படித்தே ஆக வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆளுநர் சொல்கிறார். ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என சொல்கிறார்.

என்னிடம் எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை என ஆளுநர் பொய் சொல்கிறார். ஆளுநரிடம் கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஒப்புதல் வழங்கப்படாமல் கிடப்பில் உள்ளன. எங்களையும் ஆளுநர் மதிக்கவில்லை, அரசியலமைப்பு சட்டத்தையும் மதிக்கவில்லை. எங்களை எதிரிகளைப்போல் பார்த்து வருகிறார்.

நாங்கள் கொள்கைக்காக, மக்களுக்கு அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக பாடுபடுகிறோம். இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என எத்தனையோபேர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் இருக்கும் வரை இந்த கட்சியை அழிக்க முடியாது என்றார்.

கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. , மு.அப்துல்வகாப் எம்.எல்.ஏ., திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜு, மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x