Published : 09 May 2023 06:34 PM
Last Updated : 09 May 2023 06:34 PM
சென்னை: கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்து ஜுன் மாதம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.
இம்முனையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பேருந்துகள் நிறுத்துவதற்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. புறநகர் பேருந்துகளுக்காக தனி பணிமனை உள்ளது. மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகளுடன் மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதிகள் 60 அமைக்கப்பட்டுள்ளன. தனி அலுவலக கட்டிடம், பாதுகாகப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள், கழிவறைகள், மாகர பேருந்துகளுக்காக தனி பணிமனை போன்ற வசதிகள் உள்ளன.
2 அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய பிரதான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளன. அடித்தளத்தில் 2,769 இருசக்கர வாகனங்கள், 324 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள், அவசர சிகிச்சை மையம், மருந்தகம் பொருள் பாதுகாப்பு அறை, தாய்ப்பாலூட்டும் அறை, பயணச்சீட்டு வழங்கும் இடம், பணம் எடுக்கும் இயந்திரம், நேரக்காப்பாளர் அறை, கண்காணிப்பு கேமரா அறை, பொது கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் 46 கடைகள், 1 உணவகம், 4 பணியாளர் ஓய்வறைகள், ஆண், பெண் பயணிகளுக்காக தனி ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள் அமைப்பட்டுள்ளன. மேலும் 144 பணியில்லா பேருந்துகள் நிறுத்த தனி இடம் மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் எரிபொருள் நிரப்புவதற்கு இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படவுள்ளன. இதில், இயற்கை நிலக்காட்சி, குளம், கால்வாய், நடைபாதை, கற்சிற்பங்கள், நீரூற்றுகள் ஆகிவை அமைக்கப்படவுள்ளன. இந்நிலையில், புதிய பேருந்து முனையத்தில் அரசு பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனைக் மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT