Published : 09 May 2023 04:42 PM
Last Updated : 09 May 2023 04:42 PM
சென்னை: சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள புளியூர் கால்வாய் ரூ.5 கோடி மதிப்பீட்டில் முழுமையாக தூர்வாரி மழைக்காலங்களில் வெள்ள சேதாரம் எதுவும் ஏற்படாமல் பராமரித்து, பாதுகாப்பதற்கு உண்டான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று (9.5.2023) சென்னை, அண்ணாநகர் மேற்கு, 100 அடி பிரதான சாலையில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் நகரும் மின்படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்படுவது தொடர்பாகவும், சென்னை, ஷெனாய் நகரில், 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை, ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள 1.5 கி.மீ. நீளமுள்ள புலியூர் கால்வாய் கரைகளை ரூ.5 கோடி மதிப்பீட்டில் அழகுப்படுத்துவது தொடர்பாக நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"சட்டமன்ற பேரவையில் 2023-24 நிதியாண்டிற்கான அறிவிப்புகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை துரிதமாக செயல்படுத்தும் வகையில், சென்னை, அண்ணாநகர் மேற்கு 100 அடி பிரதான சாலை வி.ஆர்.மால் அருகில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நகரும் மின்படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்படும்.
சென்னை, ஷெனாய் நகரில், 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை, ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
அதேபோல சென்னை, கோடம்பாக்கத்தில் புளியூர் கெனால் என்று அழைக்கப்படுகின்ற 1.5 கிலோமீட்டர் நீளத்தில் இருக்கின்ற கால்வாயை ரூ.5 கோடி மதிப்பீட்டில் முழுமையாக தூர்வாரி மழைக்காலங்களில் இந்த பகுதிகளில் வெள்ள சேதாரம் எதுவும் ஏற்படாமல் பராமரித்து, பாதுகாப்பதற்கு உண்டான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை அதேபோன்று கடற்கரையை தூய்மைப்படுத்துகின்ற பணிகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. 14 சட்டமன்ற தொகுதிகளில் 19 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, மீதமுள்ள 15 இடங்களிலும் வெகு விரைவில் கள ஆய்வு மேற்கொண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக பணிகளை தொடங்கி, வேகமாக முன்னெடுக்கும் காரியத்தில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது." என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment