Published : 09 May 2023 04:18 PM
Last Updated : 09 May 2023 04:18 PM

கும்பகோணம் | மாநகராட்சி உறுப்பினர்கள் உரிமை மீறப்படுவதாக புகார்: அதிமுகவினர் வெளிநடப்பு

கும்பகோணம் மாநகராட்சி

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சியில் உறுப்பினர்களின் உரிமையைப் பறிக்கும் செயல் நடைபெறுகிறது என்று கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கும்பகோணத்தில் மாநகராட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு மேயர் க.சரவணன் தலைமை வகித்தார். துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் ஆர்.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பேசிய உறுப்பினர்கள், கும்பகோணத்தில் உள்ள புதைச் சாக்கடைகளைச் சீர் செய்யாததால் கழிவு நீர் ஆறாக சாலையில் ஒடுகிறது. இதே போல் 45-வது வார்டில் 3 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரிகள் இருக்கும் காளியாப்பிள்ளைத் தெருவில் கழிவு நீர் பல நாட்களாக ஒடுவதால், வாக்களித்த மக்கள், மிகவும் மோசமாக பேசுகிறார்கள். எனவே, பள்ளிகள் திறப்பதற்குள் அப்பகுதிகளிலுள்ள புதை வழிசாக்கடையை சீர் செய்ய வேண்டும்.

கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மேற்கூரைகள் இதுவரை 5 முறை கீழே விழுந்துள்ளது. ஆனால் யாருக்கும் பாதிப்பில்லை. மேலும், அங்கு உணவு விடுதிகள், கடைகள் இருப்பதால், அங்குச் செல்லும் பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும். மேலும், அங்குள்ள சுகாதார வளாகங்களைத் தூய்மையாகவும், அங்கு பொருள் வைப்பறை திறக்க வேண்டும். இதே போல் கும்பகோணத்திலுள்ள பெரும்பாலான சுகாதார வளாகங்கள் போதுமான பராமரிப்பு இல்லாமல் உள்ளதைச் சீர் செய்ய வேண்டும். மாநகரப்பகுதிகளிலில் மாடுகள், நாய்கள், குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், புதியதாக பொறுப்பேற்றுள்ள ஆணையரையும், மாடுகள் முட்டும் என உறுப்பினர் கூறியதால், அங்குச் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.

தெருவிளக்குகளை சீர் செய்ய நியமிக்கப்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் பேச்சை மதிப்பதில்லை. இதனால் 1 வார்டுக்கு சுமார் 6 மின்கம்பங்களில் மின்விளக்குகள் எரியவில்லை. எனவே, அந்த ஒப்பந்த பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாமன்றக்கூட்டத்தில் பேசுவதற்கு உறுப்பினர்களுக்கு கட்டாயம் அனுமதி வழங்க வேண்டும்.

மாநகராட்சி பள்ளி மைதானத்தில் பல ஆண்டுகளாக மாட்டிறைச்சியின் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இது குறித்து பல முறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாட்டிறைச்சியை கொட்டுபவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதித்தும், சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். மாநகரப் பகுதியிலுள்ள கும்பேஸ்வரர் பூங்கா மிகவும் மோசமாக உள்ளதைச் சீர் செய்து தர வேண்டும்.

ஏஆர்ஆர் காலனிக்கு, சுகாதார மேற்பார்வையாளர்கள் உரிய பணியினை மேற்கொள்ளவதில்லை. அப்பகுதிக்கு குடிநீர் வரும் குழாயினை சுற்றிலும் தேங்கியுள்ள தண்ணீரில் புழுக்கள் போன்ற ஜந்துக்கள் உள்ளதைச் சீர் செய்ய வேண்டும். இது குறித்து இந்த அவல நிலைக்கு தான் உனக்கு வாக்களித்தோமா எனக் கேள்வி கேட்கிறார்கள் என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த ஆணையர் ஆர்.லட்சுமணன் கூறியது, ”மாநகரப்பகுதியில் மகவும் மோசமாக உள்ள 12 சுகாதார வளாகங்களைக் கண்டறியப்பட்டுள்ளோம். தனியார் பங்களிப்புடன் அதனைச் சீர் செய்யப்படும். புதிய பேருந்து நிலையத்திற்கு தேவையான கட்டுமானப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். விரைவில் சீரமைக்கப்படும். நாய்களை பிடித்து கருத்தடை செய்து வருகின்றோம். மாடுகள் மற்றும் குரங்குகளும் கட்டுப்படுத்தப்படும். மேலும் உறுப்பினர்கள் கோரிக்கைகள் அனைத்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக கூட்டம் தொடங்கியதும், முன்னாள் உறுப்பினரின் மறைவுக்கான அஞ்சலியை மேயர் தெரிவிப்பார் என்றார் துணை மேயர். அப்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அய்யப்பன், நான் தான் அஞ்சலி செலுத்துவேன் என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அலுவலர் அஞ்சலியை படிக்க, சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில், அதிமுக உறுப்பினர் ராம.ஆதிலெட்சுமி, வார்டுகளில் நடைபெறும் திட்டங்கள் குறித்து உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. இத்தகைய செயல் உறுப்பினர்களின் உரிமையை பறிப்பதாகும். திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து உங்களுக்கு யார் அதிகாரம் வழங்கினார்கள் எனக் கேள்வி கேட்டதால், சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் இத்தகைய செயலை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x