Last Updated : 09 May, 2023 03:21 PM

4  

Published : 09 May 2023 03:21 PM
Last Updated : 09 May 2023 03:21 PM

தமிழக எம்.பி.,க்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்கவில்லை - ஆளுநர் தமிழிசை விளக்கம்

தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி: தமிழக எம்.பிக்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்கவில்லை. போராட்டம் நடத்தாமல் ஆக்கபூர்வமாக செயல்படலாம் என்றுதான் கூறினேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜிப்மர் கட்டணம் நிர்ணயிப்பதை நிறுத்தக்கோரி எம்.பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார் போராட்டம் நடத்தியதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரி சுகாதாரத்துறை திருவிழாவில் 4 ஆயிரம் பேர் பரிசோதனை செய்தனர். 150 பேர் உடல் உறுப்பு தான உறுதி மொழி செய்தனர். 200 பேருக்கு கண்ணாடி தரப்பட்டது. 2 பேர் இதய அறுவை சிகிச்சை உரியவர்களாக கண்டறியப்பட்டனர்.

ஜிப்மரில் புதிய பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏழைகளைத் தவிர்த்து மற்றவர்களுக்கு கட்டணம் வசூலிக்க ஜிப்மர் முடிவு எடுத்தவுடன் அது அதிகமாக இருப்பதால் குறைக்கக்கூறி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்புகொண்டு பேசினேன். அது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு நிதி ஜிப்மருக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

எம்.பிக்கள், இயக்குநரை நேரடியாக சந்தித்து கேட்கலாம். நான் மருத்துவமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் வேண்டாம் என்றுதான் தெரிவித்தேன். மக்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் என்பதுதான் எனது கருத்து. ஆளுநர் கருத்தே சொல்லக்கூடாதா- அதற்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறுகிறார்கள்.

அதைபற்றி எனக்கு கவலையில்லை. மக்களிடம் உண்டியல் குலுக்கி சிறப்பு விமானத்தில் என்னை ஏற்றி அனுப்புவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகிறார். அதுவும் மக்களிடத்தில் இருந்துதான் பெறவேண்டுமா- நீங்கள் சேர்த்து வைத்ததில் வாங்கினாலும், அதில் நான் ஏற மாட்டேன். நான் பொதுமக்களுடன்தான் விமானத்தில் பயணிக்கிறேன். சிறப்பு விமானம் பயன்படுத்துவதில்லை. என்னை அனுப்ப நாராயணசாமி கவலைப்படவேண்டாம்.

மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மக்களுக்கு சேவை செய்யாமலும் இருக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ரகம் நான். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். நான் பணியை செய்கிறேன். கரோனா நேரத்தில் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் மருத்துவமனைக்கு தைரியமாக சென்று வரவில்லை. நான் சென்று வந்தேன். போராட்டம் நடத்தாமல் ஆக்கபூர்வமாக செயல்படலாம். தமிழகத்தில் இருப்போருக்கு (எம்.பிக்களுக்கு ) இங்கு என்ன வேலை என்று கேட்கவில்லை. ஜிப்மர் மருந்துகள் தட்டுப்பாடு இருந்ததால் உடன் வாங்க ஏற்பாடு நடக்கிறது.

ஜிப்மரில் மக்கள் மருந்தகம் அமைக்க டெண்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிப்மருக்கு வக்காலத்து வாங்கவில்லை. சிடி ஸ்கேனுக்கு 90ம் ஆண்டில் இருந்து கட்டணம் வாங்குகிறார்கள். பொதுமக்கள் மீது அதிக அக்கறை எங்களுக்கு உள்ளது. விசாகா கமிட்டி அரசு அலுவலகங்களில் அமைப்பதை பரிசீலிப்போம். மருத்துவம், பள்ளி, பொதுமக்கள் சேவை எந்த விதத்திலும் மக்கள் பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுகிறோம். முதல்வர் கோரிக்கைகளை வைத்தாலும், கையெழுத்து போடுவதில்லை என்று கூறுவது தவறு. அறிவிப்புகள் வருவதை நீங்கள் பார்க்கலாம். எல்லாமல் சரியாக நடக்கிறது'' என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x