Published : 09 May 2023 03:02 PM
Last Updated : 09 May 2023 03:02 PM

ஓபிஎஸ், டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க பாஜக எங்களை நிர்பந்திக்காது: ஜெயக்குமார் உறுதி

அமைச்சர் ஜெயக்குமார் | கோப்புப்படம்

சென்னை: "ஓபிஎஸ் - டிடிவி சந்திப்பால் எந்தவிதமான தாக்கமும், அதிமுகவுக்கு ஏற்படப்போவது கிடையாது. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை கட்சியில் ஒருபோதும் சேர்க்கப்போவது இல்லை. பாஜகவும் அதுபோன்ற நிர்பந்தத்தை எங்கள் மீது வைக்காது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செவ்வாய்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஓபிஎஸ் டிடிவி தினகரன் இணைப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "காய்ந்த கொல்லையில் குதிரை மேய்ந்தால் என்ன? கழுதை மேய்ந்தால் என்ன? இந்த இணைப்பால் ஒரு தாக்கமும் ஏற்படாது. ஓபிஎஸ் - டிடிவி சந்திப்பு என்பது, நீண்ட நாட்களாக சந்தித்துக் கொள்ளாத கவுண்டமணியும் செந்திலும் சந்தித்தால் எப்படி இருக்குமோ? அதுபோலத்தான் நகைச்சுவையோடு, கோமாளித்தனமான ஒரு சந்திப்பு. ஆரம்ப காலக்கட்டத்தில், ஓபிஎஸ் தர்மயுத்தம் யாருக்கு எதிராக தொடங்கினார்? சசிகலா குடும்பத்துக்கு எதிராகத்தான். அந்த குடும்பத்தைப் பற்றி ஏராளமான விமர்சனங்களை முன்வைத்தார்.

மாஃபியா கும்பல் என்றார், தமிழ்நாட்டை சூறையாடிய கும்பல் என்றார். தமிழ்நாட்டை கூறுபோட்டு விற்ற குடும்பம் சசிகலா குடும்பம் என்று கூறினார். டிடிவியைப் போல ஒரு குற்றவாளி உலகத்திலேயே இருக்கமுடியாது என்று கூறினார். அவரைப் போல ஒரு அரசியல் வியாபாரியை உலகிலேயே பார்க்கமுடியாது என்றார். அதோடு மட்டுமின்றி, அரசியல் துரோகி என்றும் ஓபிஎஸ் கூறியிருந்தார்.

தர்மயுத்தம் தொடங்கியபோது, ஜெயலலிதா மரணத்தில் இந்த குடும்பத்தின் மீதுதான் சந்தேகம் என்று ஓபிஎஸ் கூறினார். ஊர் ஊராகச் சென்று ஜெயலலிதா மரணத்துக்கு அந்த குடும்பம்தான் காரணம் என்று சொல்லிவிட்டு, மீண்டும் அதிமுகவில் வந்து ஓபிஎஸ் இணைந்து ஒருங்கிணைப்பாளர் ஆனார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றார்.

அதன்படி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் அமைத்த பிறகு, ஆறுமுகசாமி ஆணையம் பலமுறை ஓபிஎஸ்ஸுக்கு சம்மன் அனுப்பியது. அப்போதெல்லாம் செல்லாமல் இருந்துவிட்டு, இறுதியாக ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகமே இல்லை என்று கூறினார். சசிகலா மீது ஒரு தனிப்பட்ட மரியாதை என்றைக்குமே உண்டு என்று அந்தர்பல்டி அடித்தவர் ஓபிஎஸ்.

அந்த வகையில், அரசியலில் சந்தர்ப்பவாதம், துரோகம், நிறம் மாறுபவர் ஓபிஎஸ். அவரை நம்புகின்ற அனைவருக்குமே துரோகம் நினைப்பவர். எனவே ஓபிஎஸ் - டிடிவி சந்திப்பால் எந்தவிதமான தாக்கமும், அதிமுகவுக்கு ஏற்படப்போவது கிடையாது. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை கட்சியில் ஒருபோதும் சேர்க்கப்போவது இல்லை. பாஜகவும் அதுபோன்ற நிர்பந்தத்தை எங்கள் மீது வைக்காது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x