Published : 09 May 2023 02:29 PM
Last Updated : 09 May 2023 02:29 PM

கோடை மழையினால் டெல்டா மாவட்டங்களில் பருத்தி, எள் பயிர்கள் சேதம்: நிவாரணத்தை உடனடியாக அறிவிக்க இபிஎஸ் வலியுறுத்தல்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

சென்னை: கோடை மழையினால் டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த பருத்தி, எள் பயிர்களுக்கான நிவாரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பெய்த கோடை மழையினால் பருத்தி, எள் மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பருத்தி மற்றும் எள் சாகுபடி செய்திருந்த நிலங்களில் மழை நீர் தேங்கி அப்பயிர்களின் வேர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பருத்தி மற்றும் எள் பயிரிட்டிருந்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முழுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், ஓரிரு நாட்களில் தமிழகத்தில் புயல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தமிழகம் முழுவதும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக்கோடை மழையினால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி மற்றும் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த எள் போன்ற பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயப் பெருமக்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், வலங்கைமான், கூத்தாநல்லூர் என அனைத்து தாலுகாக்களிலும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பருத்தி மற்றும் 10 ஆயிரம் ஏக்கரில் எள் பயிரிடப்பட்டு உள்ளதாகவும், பயிர்கள் நன்கு விளைந்து மகசூல் எடுக்க வேண்டிய நேரத்தில் கோடை மழையினால் பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் விவசாயிகளுக்கு முழுவதுமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பருத்தி பயிர் இரண்டு மகசூல் தரக்கூடிய பயிராகும். இக்கோடை மழையினால் பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதை ஊடகங்களும், நாளிதழ்களும் செய்திகளாக வெளியிட்ட பிறகும், பருத்தி மற்றும் எள் பயிர்களின் சேதத்தை பார்வையிடுவதற்கோ, பாதிப்பை கணக்கிடுவதற்கோ, வேளாண் துறை அதிகாரிகளோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ இதுவரை இம்மாவட்டங்களுக்கு வரவில்லை என்று விவசாயப் பெருமக்கள் வேதனை தெரிவித்ததாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

அதிமுக அரசில் இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் உடனடியாக கணக்கெடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை உடனுக்குடன் வரவு வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் வாங்கும் நிலை ஏற்படவில்லை. ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில், இயற்கைச் சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுக்க உரிய நேரத்தில் அதிகாரிகளை அனுப்பாதது மட்டுமல்ல, பாதிப்புகளுக்கு உண்டான நிவாரணத் தொகையையும் மிகவும் குறைவாக கணக்கிடப்படுவதாகவும், அந்தத் தொகையையும் சுமார் ஓராண்டு கால தாமதத்திற்குப் பிறகே பாதிக்கப்பட்ட தங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

எனவே, இந்தக் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி மற்றும் எள் பயிரிடப்பட்ட திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும்; பயிர் பாதிப்பை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும் என்றும்; சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட அனுப்பி வைக்க வேண்டும் என்றும், இந்த திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

ஒரு ஏக்கர் பருத்தி பயிரிட சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றும், எள் பயிரிட ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் முழுவதுமாக கணக்கெடுத்து, கோடை மழையினால் பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் பருத்தி பயிருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும்; ஒரு ஏக்கர் எள் பயிருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x