Published : 09 May 2023 07:10 AM
Last Updated : 09 May 2023 07:10 AM

வேங்கைவயல் சம்பவம் | டிஎன்ஏ பரிசோதனைக்கு மேலும் 10 பேரிடம் ரத்த மாதிரி - சிபிசிஐடி நடவடிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக மேலும் 10 பேரிடம் நேற்று ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு காவலருக்கு சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் குரல் மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கெனவே 2 பேர்: பின்னர், வேங்கைவயல், இறையூர் பகுதியில் இருந்து காவலர் உட்பட 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக சிபிசிஐடி போலீஸார் சம்மன் அளித்திருந்தனர்.

இதில், காவலர் மற்றும் இறையூர் பகுதியைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 3 பேரிடம் இருந்து மட்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேங்கைவயலை சேர்ந்த 8 பேர் ரத்த மாதிரி கொடுக்க முன்வரவில்லை.

சிபிசிஐடி சம்மன்: அதன்பிறகு, டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுத்து வேங்கைவயலைச் சேர்ந்த 2 பேர், இறையூர் பகுதியைச் சேர்ந்த 8 பேர் என மொத்தம் 10 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் அண்மையில் சம்மன் அளித்தனர்.

அதன்படி, 10 பேரிடம் இருந்தும் நேற்று ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட வன்கொடுமைகள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x