Published : 09 May 2023 06:32 AM
Last Updated : 09 May 2023 06:32 AM

பிளஸ் 2 வகுப்புக்கான ஆசிரியர்களின்றி தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவர்கள்: கார்குடி அரசு மேல்நிலைப் பள்ளி அசத்தல்

கூடலூர்: கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி அரசு பள்ளியில் முதல் முறையாக பிளஸ் 2 தேர்வு எழுதிய 32 மாணவர்களில் 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 24 பேர் பழங்குடியின மாணவர்கள்.

பிளஸ் 2 ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், 10-ம் வகுப்பு வரை கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியால் முதல் முறையாக பொதுத் தேர்வு எழுதிய இந்த மாணவர்கள், அதிகபட்ச தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.

கார்குடி அரசு பள்ளி கடந்த 2021-ம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள், யானை பாகன்கள், உதவியாளர்களாக பணிபுரிந்து வருபவர்களின் குழந்தைகள் அதிக அளவில் படிக்கின்றனர். 1954-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேல்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்ட நிலையிலும் அதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

கடந்த டிசம்பர் மாதத்தில் இரண்டு தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுக்கு 3 மாதம் முன்பு 10-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை கற்பித்துள்ளனர். நேற்று வெளியான தேர்வு முடிவில் 33 மாணவர்களில் 31 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 24 பேர் பழங்குடியின மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உரிய ஆசிரியர்கள் இல்லாத நிலையிலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் விடாமுயற்சியால் தேர்ச்சி பெற்றதை கொண்டாடும் வகையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர்.

இந்நிலையில், அனைத்து வகுப்புகளுக்கும் நிரந்தரமாக ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டுமென மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x