Published : 29 Sep 2017 04:04 PM
Last Updated : 29 Sep 2017 04:04 PM

மருதமலை பகுதியில் சாலையை கடக்கும் காட்டுப் பன்றிகள்: அச்சத்தில் வாகன ஓட்டிகள், பக்தர்கள்

கோவையில் மதுக்கரை, மாங்கரை, மேட்டுப்பாளையம், காரமடை நெடுஞ்சாலைப் பகுதிகளில் காட்டு யானைகள் கடப்பதும், அதனால் அவ்வப்போது மக்கள் பீதியில் ஆழ்வதும் சகஜமாக இருந்து வருகிறது. அந்த இடத்தை காட்டுப்பன்றிகளும் தற்போது பிடித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளன.

கோவைக்கு மேற்கே சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பிரபல ஆன்மீக ஸ்தலமான மருதமலை. இங்கு தமிழகத்திலிருந்து மட்டுமல்லாது, வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியின் நடுவே இந்த கோயில் அமைந்திருப்பதால் காட்டு யானைகள் உட்பட பல வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகவும் உள்ளது.

குறிப்பாக, காட்டுயானைகள் மருதமலையை சுற்றியுள்ள பாரதியார் பல்கலை, சோமையனூர், தடாகம், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஊடுருவி அங்குள்ள விளைநிலங்கள், குடியிருப்புகளை சேதப்படுத்துவதும் நடந்து வருகிறது. அதிலும் கடந்த சில வருடங்களாக கோயில் படிக்கட்டுகளிலேயே காட்டுயானைகள் வந்து நின்று கொள்வதும், படியேறும் பக்தர்கள் அலறி ஓட்டம் பிடிப்பதும், யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடிப்பதும் நடந்து வந்தது. இந்த நிலையில் தற்போது காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

‘முன்பெல்லாம் எங்கோ ஒன்றிரண்டு காட்டுப் பன்றிகள்தான் திரியும். நாங்க காட்டுக்குள்ளே சீமார் புல், நெல்லிக்காய், கடுக்காய், தேன் எடுக்கப்போகும்போதுதான் அதை பார்ப்போம். காட்டுயானை கூட, நம்ம பேசாம அசையாம நின்னுட்டா அது பாட்டுக்கு போயிடும். ஆனா இது அப்படியில்ல. எகிறிப்பாய்ஞ்சுடும். அதனால ஒண்ணு ரெண்டு காட்டுப்பன்றி நின்னாக்கூட அந்த வழியில திரும்ப போக மாட்டோம். இப்ப எங்கே பார்த்தாலும் பத்திருபது காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமா திரியுது. அதுவும் பட்டப்பகல்ல, சாயங்கால நேரத்துல, காலையில வெடிஞ்சு ஒன்பது மணிக்கு கூட கோயில் படிக்கட்டுலயே வந்து நிற்குது. அதை தாண்டி நாங்க வேலை வெட்டிக்கு கூட போக முடியறதில்லை. சாயங்காலம் அடிவாரத்திலிருக்கும் ஸ்கூலிலிருந்து பிள்ளைகளும் திரும்பி வர முடியலை. படிக்கட்டு வழியில போன அதுல, அதுல மாறி தார்ச்சாலையில (மலைப்பாதை) போன அதிலும் மாறி, மாறி வந்துடுது. அதுவும் ஒன்று ரெண்டு பன்றிகள் இல்லை. குறைஞ்சது பத்து, இருபது குறுக்கே நின்னுக்குது. மீறி போனா ஆள் மேல பாய்ஞ்சுடும். அதை விரட்ட வனத்துறை அதிகாரிகள்கிட்ட சொல்லியாச்சு நடவடிக்கைதான் இல்லை’ என்றனர் மருதமலை மீது அமைந்துள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள்.

மலை அடிவாரப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் கூறும்போது, ‘முந்தியெல்லாம் இப்படியில்லை. இப்ப ஒண்ணு ரெண்டு வருஷமாத்தான் கடைக்கு பக்கத்துலயே வந்துடுது. கடையில் உணவுப்பண்டங்கள் எது இருந்தாலும் விடறதில்லை. கூரைச்சாலைக் கடைகளுக்குள் புகுந்து அதையும் சாப்பிட்டு விடுகிறது’ என்றனர்.

இதே அடிவாரத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு அருகாமையில், ‘சுற்றிலும் உள்ள ஹோட்டல் கழிவுகளை கொட்டுகிறார்கள். அதை சாப்பிட இரவு நேரங்களில் எல்லாம் படையெடுத்து விடுகிறதாம். காலையில் விடிந்த பின்பும் கூட அவை நகருவதேயில்லை. அதையும் மீறி விரட்டினால் உறுமிக் கொண்டு நம் மீதே பாய்ந்து விடுகிறது’ என குறிப்பிட்டனர் அங்குள்ளவர்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மருதமலை அடிவாரத்தில் பத்துப்பதினைந்து பன்றிகள் ஒரே நேரத்தில் சாலையை கடந்தது. அதைப் பார்த்து அத்தனை வாகனங்களும் நின்றுவிட்டது. இதைப் பற்றி வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், ‘பொதுவாகவே பன்றி மீது வாகனம் மோதக்கூடாது என்பது ஐதீகம். அப்படி மோதின வாகனங்களை உடனே விற்றுவிடுவார்கள். அல்லது அதை சர்வீஸுக்கு விடுவார்கள். கோயிலுக்கு வர்ற இடத்தில் இப்படி காட்டுப்பன்றிகள் திடீர்ன்னு வேலிக்குள்ளே இருந்து வரும்ன்னு யார் எதிர்பார்ப்பாங்க. ஒரு காட்டுப்பன்றி யானையை எதிர்த்து நிற்கும்ன்னு சொல்லுவாங்க. அது மேல விழுந்தா நம்ம கதி என்ன ஆகும். இவற்றை உடனே வனத்துறை, கோயில் நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x