Published : 09 May 2023 06:09 AM
Last Updated : 09 May 2023 06:09 AM

தமிழக போலீஸார் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து விசாரிக்க டெல்லி விரைந்த ஆயுதப்படை கூடுதல் டிஜிபி

சென்னை: டெல்லி சிறையில் ரவுடி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதுகாப்புப் பணியிலிருந்த தமிழக போலீஸார் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்க தமிழக ஆயுதப்படைப் பிரிவு கூடுதல் டிஜிபி எச்.எம்.ஜெயராம் டெல்லி விரைந்துள்ளார்.

பாதுகாப்புக்குப் பெயர் போன டெல்லி திகார் சிறையில் கடந்த 2-ம் தேதி முக்கிய ரவுடியான சுனில் தில்லு தாஜ்பூரியா (33) எதிர் தரப்பு ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். சிறைக்குள்ளேயே நடைபெற்ற இக்கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சிறைக்குள் ரவுடி கொலை செய்யப்படும் சிசிடிவிகாட்சிகள் அண்மையில் வெளியாகின. அதில், மோதல் நடைபெற்ற பகுதிக்கு வெளியே தமிழககாவல் துறையின் சிறப்புக் காவல்படையைச் (8-வது பட்டாலியன்) சேர்ந்த போலீஸார் பணியிலிருந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் கொலையைத் தடுக்கசிறிதும் முயற்சி செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக திகார் சிறை நிர்வாகம் இதுவரை பலரைப் பணிஇடைநீக்கம் செய்துள்ளது. இதில் தமிழக சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 8 பேரை பணியிலிருந்து விடுவித்ததோடு அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கத் தமிழக டிஜிபி-க்கு டெல்லி சிறைத் துறை டிஜிபி பரிந்துரை செய்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தமிழக ஆயுதப்படை பிரிவு கூடுதல் டிஜிபி எச்.எம்.ஜெயராமுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஜெயராம் டெல்லிக்கு விரைந்துள்ளார்.

திகார் சிறைக்குள் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக போலீஸாருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு உள்ளதா? தமிழக போலீஸார் உண்மையிலேயே பணியில்கவனக் குறைவாகச் செயல்பட்டார்களா? அல்லது உள்நோக்கத்தோடு தமிழக போலீஸார் பழிவாங்கப்பட்டார்களா? என விசாரணை நடத்தி, அறிக்கையாக தயார் செய்து டிஜிபிசைலேந்திரபாபுவிடம், ஜெயராம் விரைவில் ஒப்படைக்க உள்ளதாகபோலீஸ் அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x