Published : 09 May 2023 06:09 AM
Last Updated : 09 May 2023 06:09 AM
திருவள்ளூர்: ஆவடியில் நீட் தேர்வு மையத்துக்கு சரியான நேரத்துக்குள் செல்ல முடியாமல் தவித்த மாணவிக்கு ரோந்து வாகனத்தில் உரிய நேரத்துக்குள் அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்த போக்குவரத்துக் காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருத்தணி, பி.ஆர்.பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் -கன்னியம்மாள் தம்பதியின் மகள் ஆனந்தி. இவர் நேற்று முன்தினம் நடைபெற்ற நீட் தேர்வு எழுதுவதற்காக, ஆவடியில் உள்ள தேர்வு மையத்துக்கு வந்தார். ஆனால், வழி தவறி வேறு ஒரு தேர்வு மையத்துக்கு சென்று விட்டார். இதனால், அவரை தேர்வு மையத்துக்கு உள்ள அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதனால், தேர்வு எழுத முடியாமல் போய் விடுமோ என மனவேதனை அடைந்து அழுதபடி தனது பெற்றோருடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த ஆவடி போக்குவரத்துக் காவலர்கள் தனசேகரன், தினேஷ் குமாரசாமி ஆகிய இருவரும் நிலமையை உணர்ந்து ஆறுதல் கூறியதுடன், அவர்களை தங்களது ரோந்து வாகனத்தில் ஏற்றி சென்று தேர்வு மையத்துக்கு உரிய நேரத்துக்குள் கொண்டு போய் சேர்த்தனர்.
காவலர்கள் இருவரின் மனிதாபிமான செயலைக் கண்டு ஆனந்தியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மேலும், காவலர்களின் இந்த நற்செயலுக்கு பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT