Published : 08 May 2023 08:57 PM
Last Updated : 08 May 2023 08:57 PM

“அதிமுகவை மீட்டெடுக்க ஒன்றிணைந்துள்ளோம்” - சந்திப்புக்குப் பின் தினகரன், ஓபிஎஸ் தகவல்

சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: "உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்துகின்ற விதமாக, மீட்டெடுபதற்காக நானும் சகோதரர் ஓபிஎஸ்ஸும் இணைகிறோம்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, பன்னீர்செல்வத்துடன், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் மூவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியது: "அதிமுகவை மீட்பதற்காக, ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் தனித்தனியாக செயல்பட்டனர். அந்த லட்சியத்தை அடைய சேர்ந்து செயல்படுவது என்று முடிவெடுத்திருக்கிறோம். எப்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து செயல்படுகிறார்களோ அதுபோல இணைந்து செயல்படுவோம்" என்றார்.

அப்போது, அமமுக என்ற கட்சியைத் தொடங்கி டிடிவி தினகரன் செயல்பட்டு வரும் நிலையில், இருவரும் இணைந்து செயல்படுவது என்பது எப்படி சாத்தியமாகும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், "எனக்கும், அவருக்கும் சுயநலம் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களின் கையில் அதிமுக என்ற இயக்கம் இருக்க வேண்டும். பண பலத்தை வைத்துக்கொண்டு, ஆணவம், அதிகாரத்தோடு அரக்கர்கள் போல செயல்படுகிறவர்களிடமிருந்து
கபளீகரம் செய்கிறவர்களிடமிருந்து எம்ஜிஆர், ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டெடுத்து தீய சக்தியான திமுகவை வீழ்த்துவதற்கு, உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்துகின்ற விதமாக, மீட்டெடுபதற்காக நானும் சகோதரர் ஓபிஎஸ்ஸும் இணைகிறோம்" என்றார்.

சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியது: "ஒவ்வொரு முறையும், ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என்னிடம் எப்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்திப்பீர்கள் என்றுதான் கேட்கப்பட்டன. இன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்துள்ளோம். சசிகலாவை சந்திப்பது தொடர்பாக அவரிடம் தகவல் தெரிவித்தோம். அவர் வெளியூர் சென்றிருப்பதாகவும், திரும்பி வந்தவுடன் உறுதியாக சந்திப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினாரோ, ஜெயலலிதா இந்த இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாத ஒரு மாபெரும் இயக்கமாக உருவாக்கினாரோ, அந்த நோக்கம் நிறைவேற அனைத்து அடிப்படைத் தொண்டர்களும் இணைய வேண்டும். அதுவே தமிழக மக்களின் விருப்பமாக இருக்கிறது. அதன்படி முதல்கட்டமாக இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. தொண்டர்களின் விருப்பமும் அனைவரும் ஒன்றுசேர்ந்து இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்பதாகத்தான் இருந்தது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x