Published : 08 May 2023 08:43 PM
Last Updated : 08 May 2023 08:43 PM

“நானும் தோனியின் ரசிகன்தான்; அவர் தமிழகம் தத்தெடுத்துக் கொண்ட மகன்!” - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “நானும் எம்எஸ் தோனியின் ரசிகன்தான்; தமிழகம் தத்தெடுத்துக் கொண்ட மகன் தோனி சிஎஸ்கேவில் தொடர்ந்து விளையாட வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் முதலமைச்சர் கோப்பை இலச்சினை, சின்னம் வெளியிட்டு விழா சென்னை லீலா பேலஸில் இன்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், கிரிக்கெட் வீரர் தோனி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை இலச்சினையை வெளியிட்ட தோனி இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் கோப்பைக்கான கருப்பொருள் பாடலை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் உள்ள அனைவரையும் போல நானும் எம்எஸ் தோனியின் ரசிகன்தான். அண்மையில் சேப்பாக்கம் மைதானத்திற்கு இரண்டு முறை ஐபிஎல் பார்க்கச் சென்றிருந்தேன். தோனியின் பேட்டிங்கை பார்க்க வேண்டும் என்பதே அதற்கு காரணம். தமிழ்நாடு தத்தெடுத்துக்கொண்ட மகன் தோனி சிஎஸ்கேவில் தொடர்ந்து விளையாட வேண்டும். சென்னையின் செல்லபிள்ளை தோனி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த தோனி அவரது கடுமையான உழைப்பினால் தேசிய ஐகானாக மாறியிருக்கிறார். கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் தமிழ்நாட்டிலிருந்து நிறைய தோனிகளை உருவாக்க விரும்புகிறோம். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

விளையாட்டு துறையின் வளர்ச்சியானது மிகப்பெரிய பிரமாண்டத்தை 2 ஆண்டுகளில் அடைந்திருக்கிறது. அமைச்சர் உதயநிதி பொறுப்பில் விளையாட்டு துறையானது மாபெரும் எழுச்சியை பெற்றுள்ளது. விளையாட்டு துறையில் மறுமலர்ச்சியை உதயநிதி ஏற்படுத்துவார் என உங்களைப்போல நானும் நம்புகிறேன். நாள்தோறும் ஒரு பணி விளையாட்டு துறையில் நடந்துகொண்டேயிருக்கிறது. இது விளையாட்டு துறைதான் என நினைக்காமல் இந்த துறையின் கேப்டனாக இருந்து அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியனாக்கி கொண்டிருக்கிறார் உதயநிதி. அவருக்கு எனது பாராட்டுகள்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x