Published : 08 May 2023 03:51 PM
Last Updated : 08 May 2023 03:51 PM
திருநெல்வேலி: "நீர்நிலைகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய தேவை என்ன? நீர்நிலைகளை அடைத்து சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கக் கூடாது. யார் அனுமதி வழங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி, தவறு இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நீர்நிலைகளைப் பாதிக்கும் வகையில்,
தென்காசி பகுதியில் படப்பிடிப்பு நடத்துவது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நீர்நிலைகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டிய தேவை என்ன? நீர்நிலைகளை அடைத்து சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கக்கூடாது. யார் அனுமதி வழங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி, தவறு இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பின்னர் அவரிடம், தூண்டில் வளைவு அமைப்பது தொடர்பான கோரிக்கை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அரசு தூண்டில் வளைவுகளை அமைத்துக் கொண்டிருந்தது. ஒரு ஊரில் தூண்டில் வளைவு அமைக்கும்போது, அடுத்த ஊரில் பாதிப்பு வந்தது, அந்த ஊரில் அமைத்தால், அடுத்த ஊருக்கு பாதிப்பு வந்தது, இப்படித்தான் அந்தப்பணி நடந்துகொண்டிருந்தது.
அப்போது பசுமைத் தீர்ப்பாயம், தூண்டில் வளைவு அமைக்க வேண்டாம், ரப்பரை பயன்படுத்த வேண்டும் எனவும், சென்னையில் துவங்கி கன்னியாகுமரி வரை அமைக்க வேண்டும் என்றும் கூறியது. இது இப்போதைக்கு நடக்கின்ற விசயமல்ல. இது கதைக்கு உதவாத தத்துவம். எனவே, தூண்டில் வளைவு அமைக்க கோரும் ஊர்களின் நீண்ட காலமாக கோரிவரும் ஊர்களின் தேவைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக, நீர்நிலைகளை அடைத்து சிறிய பாலங்கள் கட்டப்பட்டதாகவும், வெடிகளை அதிகமாக பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் அப்பகுதியில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருவது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT