Published : 08 May 2023 01:47 PM
Last Updated : 08 May 2023 01:47 PM
புதுச்சேரி: “தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் நட்புணர்வு தொடரும்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமி பதிலடி தந்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆனதையொட்டி அவர் கூறியது: ''புதுச்சேரி அரசு செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்துவோம். கடந்த காலத்தில் அறிவித்த திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவோம். அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுவோம். மாநில அந்தஸ்துக்காக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை விரைவில் சந்தித்து வலியுறுத்துவோம். இதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. அரசின் செயல்பாடு திருப்தியளிக்கிறது'' என்றார்.
பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் எப்போது நடைமுறைக்கும் வரும் என்று கேட்டதற்கு, "பட்ஜெட்டில் அறிவித்த புதிய திட்டங்களான பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, பிரதி மாதம் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், புதுவையில் சித்த மருத்துவக் கல்லுாரி ஆகிய அறிவிப்புகளைத் தொடங்கி வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் ஜூன் 6-ம்தேதி புதுச்சேரி வருகிறார். 6 மற்றும் 7-ம் தேதிகளில் இரு நாட்களில் இத்திட்டங்களை துவக்கி வைக்கிறார். புதிய சட்டப்பேரவை கட்டுவதற்கான பணிகள் விரைவுப்படுத்தியுள்ளோம். பணிகள் முடிந்தபிறகு அடிக்கல் நாட்டப்படும்" என்றார்.
ஜிப்மர் கட்டணம் வசூலிப்பு தொடர்பாக போராட்டம் நடந்ததிட தமிழக எம்.பி.க்களுக்கு புதுவையில் வேலை இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளாரே என்று கேட்டதற்கு, "தமிழகத்துடன் புதுச்சேரி நல்ல நட்புறவு உள்ளது. தமிழகத்துடன் ஒத்து இருப்போம். இது தொடரும். புதுவை மாநிலத்தையொட்டி தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்கள் உள்ளன. இந்த அண்டை மாநிலங்களுடன் பழைய நட்புறவு தொடரும்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT