Published : 08 May 2023 06:15 AM
Last Updated : 08 May 2023 06:15 AM

திமுக ஆட்சியின் 3-வது ஆண்டு தொடக்கம்: தலைவர்கள் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: திமுக ஆட்சியின் 3-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தலைவர்கள் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

2021-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, அவ்வாண்டு மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றார். திமுக ஆட்சியின் 2 ஆண்டுகள் நேற்று நிறைவடைந்து, 3-வது ஆண்டு தொடங்கியுள்ளது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, உதயநிதி ஸ்டாலின், கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, அரசு கொறடா கோ.வி.செழியன், இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ‘‘ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நீங்கள் பல்வேறு சாதனைகளைப் புரிந்திருக்கிறீர்கள். சில விமர்சனங்களும் வந்துள்ளன. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: விமர்சனத்தைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. நல்லதை எடுத்துக் கொள்வேன். கெட்டதைப் புறந்தள்ளி விடுவேன். ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன் இதே இடத்தில், ‘‘திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி புரிவோம்.

வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். வாக்களிக்காதவர்கள், இப்படிப்பட்ட ஆட்சிக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும். அந்த அளவுக்குஎங்களது ஆட்சி இருக்கும்’’ என்று கூறினேன். அதன்படிதான்,திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

தொடர்ந்து, கோபாலபுரம் இல்லம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அமிர்தம், எம்எல்ஏ நா.எழிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொய்வின்றித் தொடரும்... இந்நிலையில், முதல்வர் நேற்றுவெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திமுக அரசு, தற்போது ஈராண்டை நிறைவுசெய்து, 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது. தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம்.

ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம். திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம், பல ஆண்டுகளுக்கு தொய்வின்றித் தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x