Published : 08 May 2023 06:13 AM
Last Updated : 08 May 2023 06:13 AM
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.58 கோடியில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, அரசு நிர்வாக அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். இங்கு, ஆடி மாதத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழாக் காலங்களில் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில், திருவிழாக் காலங்களில் பக்தர்கள் தங்குவதற்கும், முடி காணிக்கை செலுத்துவதற்கும், பொங்கல் வைத்து வழிபடுவதற்கும் போதிய இடவசதி இல்லை. மேலும், திருவிழாக் காலங்களில் இக்கோயிலில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் வெட்டி பலியிடப்படுவது வழக்கம்.
அவ்வாறு நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள், தங்கி சமைத்து உண்பதற்குப் போதிய இடவசதி இல்லாமல் இருந்தது. அதேபோல், கோயில் முன் பொங்கல் வைத்து வழிபடும் இடமும் குப்பை கிடங்குபோல் காட்சியளித்தது. இதனால், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
இதையடுத்து இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். அதனடிப்படையில், கடந்த ஆண்டு இக்கோயிலில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சுமார் ரூ.58 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிர்வாக ரீதியிலான அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, கோயில் வளாகத்தில் ரூ.1.95 கோடியில் முடி காணிக்கை மண்டபம், ரூ.44.50 லட்சத்தில் கலையரங்கம், ரூ.20 கோடியில் கோயில் வளாகத்தில் 330 கடைகள் கட்டுதல், ரூ.1.40 கோடியில் கோயிலின் மேற்கு மற்றும் தெற்கு வெளிப் பிரகாரங்களில் கருங்கல் தளம் அமைத்தல், ரூ.2.04 கோடியில் கோயிலின் வடமேற்குப் பகுதியில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியே கழிப்பறைகள், குளியல் அறைகள், ரூ.1.38 கோடியில் அன்னதான மண்டபம், ரூ.15.60 கோடியில் கோயில் வளாகத்தில் சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைத்தல், ரூ.10.63 கோடியில் கோயிலுக்கு வரும் வழியில் உள்ள அர்ச்சுனா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இத்துடன், ரூ.1.32 கோடியில் கோயில் உள்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில் அலங்கார சுதை வேலைப்பாடுகள், ரூ.2.08 கோடியில் கோயில் வெளிப்பிரகார மண்டபத்தில் சுதை வேலைப்பாடுகள் மற்றும் ரூ.1.13 கோடியில் கோயிலுக்கு வரும் வழியில் 3 இடங்களில் தோரண வாயில்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT