Published : 08 May 2023 06:18 AM
Last Updated : 08 May 2023 06:18 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 2018-ம் ஆண்டு செப்டம்பரில் சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
மேம்பாலக் கட்டுமானப் பணி தொடங்கியதை அடுத்து டி.பி. மில்ஸ் சாலை, சத்திரப்பட்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அனைத்து வாகனங்களும் பழைய பேருந்து நிலையம் வழியாகச் செல்கின்றன. மேலும், அதே 2018-ம் ஆண்டில் தொடங்கிய பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்களும் இன்னும் நிறைவடையாததால் நகரின் முக்கியச் சாலைகள் உட்பட அனைத்துச் சாலைகளும் சேதமடைந்துள்ளன.
பஞ்சு மார்க்கெட், பழைய பேருந்து நிலையம், அரசு மகப்பேறு மருத்துவமனை, காந்தி சிலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், 21 தூண்களுடன் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. அழகை நகரில் சர்வீஸ் ரோடு அமைக்கப் போதிய இடம் இல்லாததால் மேம்பாலப் பணி நிறைவடைவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து சர்வீஸ் ரோடு அமைப்பதற்காக 496 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஏப்ரல் இறுதியில் ரயில்வே மேம்பால பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.
ஆனால், தற்போது வரை பணிகள் நிறைவடையவில்லை. கட்டுமானப் பணி தொடங்கி 4 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வராததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT