Published : 21 Sep 2017 02:27 PM
Last Updated : 21 Sep 2017 02:27 PM
தமிழக கேரள வனப்பகுதியில் கேரள போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய நபரான பரமக்குடியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக கேரள எல்லையான அட்டப்பாடி, சைலண்ட்வேலியில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கேரள வனத்துறையினர், போலீஸார் மீதான அவர்களது தாக்குதலை அடுத்து கேரள போலீஸார் 'தண்டர்போல்ட்' படையை உருவாக்கியுள்ளனர். இவர்களது இயக்கங்களை ஒடுக்க தமிழக கேரள போலீஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
அதையும் மீறி சமீப காலமாக மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. தமிழக கேரள கர்நாடக எல்லையான முச்சந்திப்பில் அவர்கள் தங்கள் இயக்கத்தைப் பலப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் போலீஸார் தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த அஜிதா, குப்பு தேவராஜ் ஆகிய 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையேயான மோதல்கள் நடந்து வந்தன. இந்நிலையில் இன்று (வியாழன்) காலை தமிழக எல்லையோர கேரள அகளி வனப்பகுதியில் மாவோயிடஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபரான காளிதாஸ் என்பவரைக் கேரள போலீஸார் கைது செய்தனர்.
இவர் பரமக்குடியை சேர்ந்தவர். இவர் கடந்த 2015-ல் கேரள வனத்துறை அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் எனக் கூறப்படுகிறது. அவரிடம் பாலக்காடு மாவட்டம் அகளி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT