Published : 07 May 2023 05:23 PM
Last Updated : 07 May 2023 05:23 PM

தொடரும் தற்கொலைகள்: புதுவைக்கும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி | கோப்புப் படம்.

சென்னை: நீட் தேர்வு தோல்வி பயத்தால் புதுவை மாணவர் தற்கொலை வேதனையளிக்கிறது: உயிர்க்கொல்லி தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: ''நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக புதுவை அண்ணா நகரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஹேமச்சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் நீட் தேர்வுக்கு அஞ்சி நடந்த மூன்றாவது தற்கொலை ஹேமச்சந்திரனின் மறைவு ஆகும். இதற்கு முன் கடந்த மார்ச் 27ம் நாள் சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மாபாளையத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வந்த சந்துரு என்ற மாணவர், பயிற்சி மையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் 5-ஆம் நாள் நெய்வேலியில் நிஷா என்ற மாணவி நீட் அச்சத்தால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இவை அனைத்தும் கண்ணீரை வரவழைப்பவை.

தமிழ்நாடும், புதுவையும் வெவ்வேறு நிர்வாகப் பகுதிகளாக இருக்கலாம். ஆனால், பாதிப்புகள் ஒன்று தான். தமிழ்நாட்டைப் போலவே புதுவையின் மனநிலையும் நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரானது தான். தமிழ்நாட்டிற்கு முன்பாகவே கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே புதுவை மாநில அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதன் மீது கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீட் ஓர் உயிர்க்கொல்லித் தேர்வு. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நீர் தேர்வுக்கு அஞ்சி தமிழ்நாட்டில் 60-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வால் இனி எவரும் உயிரிழக்கக் கூடாது. அதை உறுதி செய்யும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் 454 நாட்களுக்கு முன் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும். புதுவைக்கும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மருத்துவப் படிப்பை விட மனித உயிர் மேலானது என்பதால், நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x