Published : 07 May 2023 01:10 PM
Last Updated : 07 May 2023 01:10 PM

தமிழர்களின் உரிமைகளை காக்க ‘திராவிட மாடல்’ ஆட்சி பயன்தராது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்: ஓபிஎஸ் 

ஓ.பன்னீர் செல்வம் | கோப்புப் படம்

சென்னை: தமிழர்களின் நலன்களை காக்க ‘திராவிட மாடல்’ ஆட்சி பயன் தராது என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," சாத்தியமற்ற வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்த திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக "திராவிட மாடல்" என்ற போர்வையில் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் எண்ணிலடங்கா! வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஒருபுறம் என்றால், வாக்குறுதிகளுக்கு முரணான செயல்பாடுகள் மறுபுறம். திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் காரணமாக தமிழக மக்கள் கடும் அவதிக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். தமிழக மக்கள் படும் அல்லல்களில் முக்கியமானவற்றை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்தால் ‘மாதம் ஒருமுறை மின் கட்டணம்’ நடைமுறைப்படுத்தப்படும் என்பதும், ஆண்டொன்றுக்கு 6,000 ரூபாய் வரை மக்கள் மீதான சுமை குறையும் என்பதும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி 18,000 ரூபாய் வரை கூடுதல் சுமையை ஏற்படுத்தியது திமுக இது திமுக அரசின் முதல் துரோகம்.

கரோனா நோய்த் தாக்கத்திலிருந்து மக்கள் மீளும் வரை சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியதோடு, ஆண்டுக்காண்டு சொத்து வரியை உயர்த்திக் கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தது திமுக. இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் கூடுதல் சுமையை ஏற்படுத்தியது திமுக அரசு. இது திமுக அரசின் இரண்டாவது துரோகம்.

சொத்து வரியை தொடர்ந்து குடிநீர் வரி உயர்வு. இது மூன்றாவது துரோகம். ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும் என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி. ஆட்சிக்கு வந்தவுடன் இதை நிறைவேற்றிய திமுக அரசு, இதனை ஈடு செய்யும் வகையில், ஒரு சில மாதங்களிலேயே ஆரஞ்ச் பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் அளவுக்கு உயர்த்தியது. இதேபோன்று ஆவின் பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் வகைகள் போன்றவற்றின் விலையையும் உயர்த்தியுள்ளது. ஆவின் வெண்ணெய்க்கு இன்று மிகப் பெரிய தட்டுப்பாடு நிலவுகிறது. ஆவின் பொருட்கள் தாராளமாக கிடைப்பதில்லை. ஆவின் பால் விநியோகம் வெகுவாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. பாலுக்கான கொள்முதல் உயர்த்தப்படவில்லை. மொத்தத்தில் ஆவின் நிறுவனத்தின் கதி அதோகதி. இது திமுக அரசின் நான்காவது துரோகம்.

‘நகைக் கடன் தள்ளுபடி’ என்ற வாக்குறுதி திமுகவால் அளிக்கப்பட்டது. ‘நகைக் கடன் வாங்கிக் கொள்ளுங்கள், தள்ளுபடி செய்யப்படும்’ என மேடைக்கு மேடை திமுகவினரால் பேசப்பட்டது. விண்ணப்பித்தவர்களின் 25 விழுக்காட்டினருக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 75 விழுக்காட்டு மக்கள் கடனாளியாக ஆனதுதான் மிச்சம். இது திமுக அரசின் ஐந்தாவது துரோகம்.

கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி திமுகவால் அளிக்கப்பட்டது. இது பற்றிய பேச்சே இல்லை. இது திமுக அரசின் ஆறாவது துரோகம். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மேடைக்கு மேடை திமுகவினரால் முழங்கப்பட்டது. இந்த வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக மாறிவிட்டது. இது திமுகவின் ஏழாவது துரோகம்.

அரசு ஊழியர்களுக்கும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி திமுகவால் அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் ‘இது சாத்தியமில்லை’ என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இது திமுகவின் எட்டாவது துரோகம்.

அரசு மருத்துவர்களுக்கான பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு குறித்து 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை நடைமுறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி திமுகவால் அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டு இருக்கிறது. இதற்காக குரல் கொடுப்பவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது திமுகவின் ஒன்பதாவது துரோகம்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும் என்ற வாக்குறுதி திமுகவால் அளிக்கப்பட்டது. இன்று வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது திமுகவின் பத்தாவது துரோகம்.

மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாய் என்று சொல்லிவிட்டு அதற்கு பல்வேறு நிபந்தனைகள். இது திமுகவின் பதினொன்றாவது துரோகம். நியாய விலைக் கடைகள் மூலம் கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு விநியோகம் என்ற வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது திமுகவின் பன்னிரெண்டாவது துரோகம்.

நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாயாகவும், கரும்புக்கான ஆதார விலை 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது தி.மு.க.வின் பதிமூன்றாவது துரோகம். முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி குறித்து பேச்சுமூச்சே இல்லை. மாறாக, ஏற்கெனவே முதியோர் உதவித் தொகை பெற்று வந்த பல பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். இது தி.மு.க. அரசின் பதினான்காவது துரோகம்.

எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் மானியம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இது தி.மு.க. அரசின் பதினைந்தாவது துரோகம். இப்படி அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு தி.மு.க. எண்ணற்ற துரோகங்களை தமிழ்நாட்டிற்கு இழைத்து இருக்கிறது.

இது தவிர,கரோனா காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள், மருத்துவர்களை பணியிலிருந்து நீக்கியது.அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்தது. தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்தது.அம்மா இரு சக்கர வாகன மானியத் திட்டத்தை ரத்து செய்தது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஆறு மாதத்திற்கு தள்ளிப் போடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பல்வேறு சலுகைகளை முடக்கியது. ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்காதது. பொதுத் துறை நிறுவனங்களில் வெளிமுகமை மூலம் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் அங்கு பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்களை தனியார் நிறுவனத்தின்கீழ் மாற்றுதல்

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளையும் வெளிமுகமை மூலம் மேற்கொள்ளுதல் என பல மக்கள் விரோத நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்து வருகிறது.

இதற்கெல்லாம் காரணம் கேட்டால் ‘கடன்’, ‘நிதிப் பற்றாக்குறை’ எனச் சொல்லும் தி.மு.க. அரசு, கடலில் பேனா திட்டத்தை அமல்படுத்த துடிப்பது சுயநலத்தின் உச்சகட்டம். பொது நலத் திட்டத்தை நிறைவேற்ற பணமில்லாத நிலையில் தன்னலத் திட்டம் எதற்கு என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜெயலலிதா வகுத்துத் தந்த அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழகம் செல்கிறதா என்றால் அதுவும் இல்லை. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அன்றாடம் கொலைகளும், கொள்ளைகளும் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. பத்திரிகையைப் படித்தாலே பாலியல் பலாத்காரங்கள்தான் அதிகம் இருக்கின்றன. தி.மு.க.வினரும், தி.மு.க. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு ஊழியர்களை மிரட்டியது, ராணுவ வீரரை தி.மு.க. கவுன்சிலர் கொலை செய்தது, நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டையும், அங்குள்ள வாகனங்களையும் அமைச்சரின் ஆதரவாளர்களே தாக்கியது, அமைச்சர்கள் பொதுமக்களை அடிப்பது, கிண்டல் செய்வது என பல கேலிக்கூத்துகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருகின்றன. வேலியே பயிரை மேய்வது என்ற பழமொழிக்கேற்ப சட்டத்தை காக்க வேண்டியவர்களே சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மணல் கடத்தலும், ரேஷன் பொருட்கள் கடத்தலும் அமோகமாக நடைபெற்று வருகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், வன்முறைக் களமாக தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது.

பூரண மதுவிலக்கு என்று சொல்லிவிட்டு, பார்கள் மூலமும், தானியங்கி இயந்திரங்கள் மூலமும் டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. மொத்தத்தில், தமிழர்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க ‘திராவிட மாடல்’ ஆட்சி பயன் தராது என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள். தமிழக மக்கள் வளமான பொது அறிவை பெற்றவர்கள்.

அவர்களுக்கு "வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது?" என்ற வித்தியாசம் தெரியும். தமிழர்கள் தங்களுடைய மனக் குமுறலை திமுக அரசுக்கு வெளிப்படுத்தும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x