Published : 07 May 2023 06:46 AM
Last Updated : 07 May 2023 06:46 AM
சென்னை: சிதம்பரத்தில் குழந்தைத் திருமண விவகாரத்தில், சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் கூறியது முற்றிலும் தவறானது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள்பதிவு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.
தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ்,தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் ச.உமா, செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் ம.கோவிந்தராவ், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சண்முகக்கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குழந்தை திருமண விவகாரம்: பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் நடைபெற்றது தொடர்பான விவகாரத்தில், இருவிரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் கூறியுள்ளார். நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறுவது, ஆளுநர் என்ற உயர்ந்த பொறுப்பு வகிப்பவருக்கு ஏற்றது அல்ல. அவரது கருத்து முற்றிலும் தவறானது.
அவர் கூறிய குற்றச்சாட்டை ஏற்று, குழந்தைகளின் உரிமைக்கான தேசிய ஆணையம், தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பி, ஒரு வாரத்துக்குள் பதில் அனுப்புமாறு அறிவுறுத்தி இருக்கிறது. அந்த சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மருத்துவ அலுவலர்களிடம் விசாரித்தது மட்டுமின்றி, அந்த சமயத்தில் சிறுமிக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனை படிவமும் ஆய்வு செய்யப்பட்டது. இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை என்று அப்படிவத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு தொடருமா?: கரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டாலும், தனிமனித பாதுகாப்பு அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். கரோனா பாதிப்பு தொடருமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், அவசரநிலைக்கு மட்டுமே இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
எனினும், பொது இடங்களில் முகக் கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியையும் மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...