Published : 07 May 2023 06:51 AM
Last Updated : 07 May 2023 06:51 AM
சென்னை: காவலர் குழந்தைகளின் கல்விக்காக அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகமாக மாற்றியிருப்பதற்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: சென்னை அடுத்த திருப்போரூர் ஒன்றியம் மேலக்கோட்டையூரில் காவலர்கள் அதிக அளவில் குடியிருக்கின்றனர். இவர்களது நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தனியார் பள்ளிகளுக்கு இணையாக உலகத் தரத்தில் கல்வி வழங்கும் நோக்கில் ரூ.51 கோடியில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி அமைக்க கடந்த 2017-ல் அதிமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. முதல்கட்டமாக கடந்த 2018-ல், 1 முதல் 4-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன. 2021-ல் இப்பள்ளி திறக்கப்பட்டு ஆங்கில வழியில் இருபாலர் படிக்கும் பள்ளியாக, 1 முதல் 8-ம் வகுப்பு வரை செயல்பட அரசு ஆணை பிறப்பித்தது.
இந்த நிலையில், இப்பள்ளி வளாகத்தை தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு ஒதுக்கீடு செய்து திமுக அரசு ஆணையிட்டுள்ளது. ‘சோழிங்கநல்லூரில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் இனி மேலக்கோட்டையூரில் காவலர்களின் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட பள்ளி வளாகத்துக்கு மாற்றப்படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது காவலர், பெற்றோர் மத்தியில் இடிபோல இறங்கியுள்ளது.
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு, ஏற்கெனவே உள்ள அரசு நிலத்தில் தனியாக ஒரு கட்டிடம் கட்டி மாற்றியிருக்கலாம். அதிமுக அரசு கொண்டுவந்தது என்ற ஒரே காரணத்தால், காவலர் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கான இப்பள்ளி வளாகத்துக்கு காவல் ஆணையர் அலுவலகத்தை மாற்றியுள்ள அரசின் செயலை கடுமையாக கண்டிக்கிறேன்.
ஏற்கெனவே, கடந்த 2021 பிப்ரவரியில் அதிமுக அரசு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில், காவலர்களின் குழந்தைகளுக்கு தரமானகல்வியை வழங்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, காவலர் குழந்தைகளுக்கான பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT