Published : 07 May 2023 07:23 AM
Last Updated : 07 May 2023 07:23 AM
திருச்சி: அதிமுகவில் பூத் கமிட்டிக்கு முதல்முறையாக தலைவர், செயலாளர் நியமனம் செய்யப்படுகின்றனர். இதன்மூலம் அக்கட்சியில் புதிதாக சுமார் 1.32 லட்சம் தொண்டர்களுக்கு பதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் திமுகவில் 100 வாக்காளர்களுக்கு தலா ஒரு பொறுப்பாளரை நியமித்து, அதற்கேற்ப இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப அணியினரை உள்ளடக்கிய பூத் கமிட்டியை அமைத்துள்ளனர். அதுபோலவே, அதிமுக சார்பிலும் பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
50 பேருக்கு ஒருவர்: இச்சூழலில், இதற்கு முந்தைய தேர்தல்களில் இல்லாத அளவுக்கு, தற்போது அதிமுகவின் பூத் கமிட்டி நிர்வாக அமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. 750 முதல் 1,250 வாக்காளர்களுக்கு 19 அல்லது 20 பேர் கொண்ட ஒரு பூத் கமிட்டி அமைக்கப்படுகிறது. அதில், இளைஞர், இளம்பெண் பாசறை மற்றும் மகளிரணியைச் சேர்ந்த தலா 5 பேர், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த 2 பேர் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பூத் கமிட்டி உறுப்பினராக இருக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள நிர்வாகிகள் பூத் கமிட்டியில் இடம்பெறக்கூடாது. 50 வாக்காளர்களுக்கு ஒருவர் வீதம் பொறுப்பாளரை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்குமுன், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அந்தந்த வட்ட, ஒன்றியச் செயலாளர்களின் நேரடி ஒருங்கிணைப்பின்கீழ் செயல்படுவர். அப்போது நிர்வாகிகளுக்கு அலைச்சல், பணிச்சுமை அதிகரிப்பதாகவும், கண்காணிப்பில் தொய்வு ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. இதைத்தவிர்க்க, அந்தந்த பகுதியில் இருப்பவர்களே பூத் கமிட்டியை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் வகையில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் அதே பகுதியிலிருந்து தலா ஒரு தலைவர், செயலாளரை நியமிக்குமாறும், அவர்களைக் கொண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன்படி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் பூத் கமிட்டிகளுக்கு தலைவர்கள், செயலாளர்களை நியமிப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை மாவட்டசெயலாளர் ப.குமார் நடத்தினார்.
66,000 பூத் கமிட்டிகள்: இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில், 'மைக்ரோ லெவல்' செயல் திட்டங்களுடன் களம் இறங்குகிறோம். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சுமார் 66,000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 19 பேர் வீதம் இடம் பெறுவார்கள். இந்த கமிட்டிக்கு முதல்முறையாக தலைவர், செயலாளர் பதவிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்சி நிர்வாகிகளாக உள்ளவர்கள் பூத் கமிட்டியில் இருக்க முடியாது என்பதால், இந்த புதிய நடைமுறையின்மூலம் அதிமுகவில் புதிதாக சுமார் 1.32 லட்சம் தொண்டர்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய, வட்டச் செயலாளர்களுக்கு கீழ், அங்கீகாரமிக்க பதவி என்பதால் இதற்கு கட்சியினரிடத்தில் வரவேற்பும், உற்சாகமும் கிடைத்துள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT