Published : 08 Sep 2017 08:40 AM
Last Updated : 08 Sep 2017 08:40 AM
ஏர்டெல் கைபேசி பேமென்ட் வங்கிக் கணக்குக்கு சமையல் காஸ் மானியம் செல்வதால், அதைப் பணமாகப் பெற முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வருவதாக வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 1 கோடியே 90 லட்சத்துக்கும் மேற்பட்ட சமையல் காஸ் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மானியம், மத்திய அரசின் இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் (என்பிசிஐ) மூலமாக நேரடியாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அதற்காக ஏற்கெனவே வங்கிக் கணக்கு எண்ணுடன் கைபேசி மற்றும் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. தறபோது கைபேசி எண்களுடனும் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனால் பலர் தங்கள் ஆதார் எண்களை, தங்கள் கைபேசி எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.
இவர்களில், ஏர்டெல் நிறுவன கைபேசி எண்ணை வைத்துள்ளவர்கள், அந்த எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது, ஏர்டெல் பேமென்ட் வங்கிக் கணக்கு வசதியும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்பின்னர் அவர்களுக்கு, ஏர்டெல் பேமென்ட் வங்கிக் கணக்குக்கே காஸ் மானியம் செல்கிறது. அந்தப் பணத்தை எடுக்க முடியவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாசகர்கள் ‘தி இந்து - உங்கள் குரல்’ சேவை வழியாக தொடர்புகொண்டு கூறியதாவது:
எங்களது ஏர்டெல் கைபேசி எண்ணை காஸ் மானியம் பெற பதிவு செய்துள்ளோம். அந்த எண்ணுடன் அண்மையில் ஆதார் எண்ணையும் இணைத்தோம். பின்னர் காஸ் மானியம், வங்கிக் கணக்குக்கு பதிலாக, ஏர்டெல் பேமென்ட் வங்கிக் கணக்குக்குச் செல்கிறது. அந்த வங்கியில் நாங்கள் கணக்கு தொடங்கவே இல்லை. ஏர்டெல் நிறுவனத்தில் மானிய தொகையைக் கேட்டால், தர மறுக்கிறார்கள். கைபேசி எண்ணுக்கு ரீசார்ஜ் செய்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர். இதனால் மானியத் தொகையைப் பெற முடியாமல் அவதிக்குள்ளாகிறோம் என்றார்.
இதுதொடர்பாக வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
என்பிசிஐ-தான் ஆதார் எண் அடிப்படையில் காஸ் மானியம் வழங்குகிறது. கடைசியாக நாம் எந்த வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கிறோமோ, அதில் காஸ் மானியம் செல்லும் வகையில் கணினி மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஏர்டெல் வங்கிக் கணக்குக்கு காஸ் மானியம் செல்கிறது. பொதுமக்கள் சிம் கார்டுகளை வாங்கும்போதும், ஆதார் இணைப்பின்போதும் விண்ணப்பங்களை அவர்களே முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வங்கிக் கணக்கு தொடங்க விருப்பமா என்ற பகுதி இருக்கும். அதில் இல்லை என தெரிவிக்க வேண்டும். சான்று ஆவணங்களையும், புகைப்படத்தையும் கொடுத்துவிட்டு, கையொப்பம் மட்டும் இட்டுவிட்டு வந்துவிடக்கூடாது என்றார்.
இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: பொதுமக்கள் விருப்பம் இன்றி ஏர்டெல் வங்கிக் கணக்கைத் தொடங்க மாட்டோம். அவர்களின் கை ரேகையைப் பதிந்து, அவர்களின் கைபேசி எண்ணுக்கு ஒருமுறை அனுப்பப்படும் கடவுச் சொல்லை அனுப்பி, வாடிக்கையாளர் மூலமாகப் பெற்றுதான், ஏர்டெல் வங்கிக் கணக்கைத் தொடங்குகிறோம். வாடிக்கையாளருக்குத் தெரியாமல் வங்கிக் கணக்கு தொடங்கவே முடியாது. அவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கியது தொடர்பாக தமிழிலேயே குறுஞ்செய்தியும் அனுப்பிவிடுகிறோம். தொலைபேசி மூலமாக அழைத்தும் தெரிவிக்கிறோம். அவர்களின் ஏர்டெல் வங்கிக் கணக்குக்கு வரும் பணத்தை, ஏர்டெல் ஸ்டோர்களில் பணமாகப் பெற்றுக்கொள்ளலாம். பணம் தராவிட்டால் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய எண்களான 400, 121 ஆகியவற்றில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த வங்கிக் கணக்கு தேவையில்லை என்று, எழுத்துபூர்வமாக தகவல் அளித்தால், கணக்கை ரத்து செய்தும் தருகிறோம் என்றனர்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன (ஐஓசி) பொதுமேலாளர் (பெருநிறுவனத் தொடர்பு) சபிதா நடராஜ் கூறியதாவது:
இதுதொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஐஓசி தலைமை அலுவலகம் மூலமாக ஏர்டெல் மற்றும் என்பிசிஐ கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் எழுத்துபூர்வமாக புகார் தெரிவிக்கும் வாடிக்கையாளர்களின் காஸ் இணைப்பு விவரங்கள் மற்றும் ஆதார் விவரங்களைப் புதிதாகப் பதிவு செய்து, அவர்கள் விரும்பும் வங்கிக் கணக்குக்கு மானியம் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு, காஸ் ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT