Last Updated : 06 May, 2023 04:25 PM

 

Published : 06 May 2023 04:25 PM
Last Updated : 06 May 2023 04:25 PM

புதுச்சேரி முதல்வரை சந்தித்த சூடானில் இருந்து திரும்பிய பொறியாளர்

புதுச்சேரி: வட ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் காவேரி எனும் பெயரில் மீட்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, சூடானில் சிக்கிய புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், சூடான் நாட்டின் ரபாக் நகரில் சர்க்கரை ஆலையில் பொறியாளராகப் பணிபுரிந்த புதுச்சேரி வில்லியனூர் தில்லை நகரைச் சேர்ந்த முருகன் (38) என்பவர் பத்திரமாக மீட்கப்பட்டு புதுச்சேரிக்கு அழைத்து வரப்பட்டார். அவரை, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இதையடுத்து, முருகன் இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரிடம் நலம் விசாரித்த முதல்வர் ரங்கசாமி, சூடானில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த வேறு யாரும் பணிபுரிகிறார்களா என்றும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் தேனீ. ஜெயக்குமார், லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் சூடானில் இருந்து மீட்கப்பட்ட பொறியாளர் முருகன் கூறும்போது, "கடந்த 10 ஆண்டுகளாக ரபாக் எனுமிடத்தில் தனியார் நிறுவனப் பொறியாளராக பணியில் இருந்தேன். கடந்த ஆண்டு ஊர் வந்து விட்டு மீண்டும் சூடான் சென்றேன். அங்கு என்னுடன் தமிழர்கள், வட மாநிலத்தவர் என 400 இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நாங்கள் இருந்த பகுதியில் பெரிய அளவில் தொந்தரவு இல்லை. இருந்தாலும் சூடான் ரபாக்கிலிருந்து சம்பந்தப்பட்ட ஆலை நிறுவனத்தார் உதவியுடன் மத்திய அரசின் ஆபரேஷன் காவேரி நடவடிக்கையால் புதுச்சேரி திரும்பியுள்ளேன். பத்திரமாக மீட்டுவர நடவடிக்கை மேற்கொண்ட முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்" என பொறியாளர் முருகன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x