Published : 06 May 2023 11:37 AM
Last Updated : 06 May 2023 11:37 AM

மக்களுக்கு சம்பந்தமில்லாத பொறுப்பில் உள்ளவர்களுக்கு திராவிட மாடல் புரியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு; மக்களுக்கு சம்பந்தமில்லாத பொறுப்பில் உள்ளவர்களுக்கு திராவிட மாடல் புரியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதன்மூலம், திராவிட மாடல் குறித்த ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார். மேலும், தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள "ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி" என்ற ஈராண்டு சாதனை மலர், முதல்வர் உதிர்த்த முத்துக்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்புகள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரைகள், முதல்வரின் உரைகள், காலப்பேழை புத்தகம், ஈராண்டு சாதனைகளை விளக்கும் தொகுப்புக் காணொலி ஆகியவற்றை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... மறக்க முடியாத குரல் இது. இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் முதல்வர் பொறுப்பில், தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்ல முழுமையாக அர்பணித்துக் கொண்டேன். மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா? என என்னை நானே கேட்டுக்கொண்டபோது, என் மனதிற்கு தெம்பும் தைரியமும் கொடுத்தவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி தான்.

மக்களுக்கு பணியாற்றுவது எனக்கு புதிதல்ல. சிறுவனாக இருந்துபோதே திராவிட இயக்கத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டேன். தமிழகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் தான் நான் முதல்வர். அவர்களுக்காக ஓய்வின்றி என் சக்திக்கும் மீறி பணியாற்றி வருகிறேன். மக்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் கை தூக்கி விடும் அரசு தான் திமுக அரசு. அனைவருக்குமான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்படுவது திமுக அரசு.

திராவிட மாடல் என்றால் என்ன என கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. மக்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் பதில். எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல். சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது. மக்களுக்கு சம்பந்தமில்லாத பொறுப்பில் உள்ளவர்களுக்கு திராவிட மாடல் என்றால் தெரியாது. மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியிலிருப்பவர்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆட்சியின் முகம் அதிகாரம் அல்ல அன்பு; சனாதனம் அல்ல சமூகநீதி. அதனால், சிலரால் அரசு விமர்சிக்கப்படுகிறது; சிலரால் நேசிக்கப்படுகிறது.

2 ஆண்டு சாதனைகளை நான் சொல்லி முடிக்க வேண்டும் என்றால் நீங்கள் 2 நாட்கள் இங்கேயே தங்கி கேட்க வேண்டி இருக்கும். இருண்டு கிடந்த தமிழகத்தில் விடியலை ஏற்படுத்தியுள்ளோம். மக்களின் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் என்னை இன்னும் உழைக்க ஊக்குவிக்கும். உங்களில் ஒருவனாக உங்களோடு ஒருவனாக இருப்பேன்." இவ்வாறு முதல்வர் பேசினார். முன்னதாக, திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x