Published : 06 May 2023 10:53 AM
Last Updated : 06 May 2023 10:53 AM
சென்னை: என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியம் கத்தாழை, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, நெல்லிக்கொல்லை, சின்ன நெற்குணம் ஆகிய 5 ஊராட்சிகளின் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் என்று கூறப்பட்டாலும், என்.எல்.சி சுரங்க நிலப்பறிப்புக்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அவர்கள் உதவியாக இருந்தது தான் இந்த இடமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அப்பட்டமான இந்த பழிவாங்கல் கண்டிக்கத்தக்கது.
உலக தண்ணீர் நாளான மார்ச் 22ம் நாள் என்.எல்.சி நிலப்பறிப்புக்கு எதிரான கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் விசாரிக்கப்பட்டது. அதனால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்று நம்பினோம். ஆனால், அதிகாரவர்க்கம் மீண்டும், மீண்டும் அதன் இயல்பை வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
ஒருபுறம் நிலப்பறிப்புக்கு எதிராக போராடிய பெண்கள் மீது வழக்கு போட்டு மிரட்டுகிறது. மறுபுறம் மக்களின் உணர்வுகளை மதித்தும், அவர்களின் கோரிக்கையை ஏற்றும் என்.எல்.சிக்கு எதிராக மக்கள் கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற உதவிய ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து பழிவாங்குகிறது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த பழிவாங்கல் சிக்கலை பெரிதாக்குவதற்கு தான் உதவுமே தவிர, தீர்ப்பதற்கு உதவாது.
அடக்குமுறையும், அத்துமீறலும், பழிவாங்கலும் எல்லா காலமும் வெற்றி பெறாது. அவை அறத்தின் முன் மண்டியிடும் காலம் வெகுவிரைவில் வந்தே தீரும். இதை உணர்ந்து ஊராட்சி செயலாளர்களின் பணியிட மாற்ற ஆணையையும், பெண்கள் மீதான பொய்வழக்குகளையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மக்கள் உணர்வுகளை மதித்து நிலப்பறிப்பு நடவடிக்கைகளை கைவிடுவதுடன், என்.எல்.சியை வெளியேற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT