Published : 21 Sep 2017 10:44 AM
Last Updated : 21 Sep 2017 10:44 AM
கன்னியாகுமரி என்றதுமே கண்ணுக்குக் குளிர்ச்சியான சுற்றுலா இடங்களும், சிப்ஸ், மட்டி வாழை உள்ளிட்ட வைதான் நமக்கு ஞாபகத்துக்கு வரும். இவைகளைக் தாண்டி, கோயில் நகைகளுக்குப் பேர்போன வடசேரியும் இதே கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் இருக்கிறது.
புவிசார் குறியீடு
நாகர்கோவில் வடசேரியில் நான்கு தெருக்களில் இருக்கும் விஸ்வகர்மா சமூகத்தினர் தலைமுறை தலைமுறையாக கோயில் நகைகள் செய்யும் தொழிலில் இருக்கிறார்கள். வழக்கமான தங்க நகைகளை விட, கோயில் நகைகள் நுட்பமான சில விஷயங்களில் மாறுபடுகிறது. இதனாலேயே இந்தத் தொழிலானது கைவினைக் கலைகள் பட்டியலிலும் இருக்கிறது. இந்த நகைகளுக்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டுள்ளது. முன்பைவிட இப்போது இந்தத் தொழிலுக்கு மதிப்பும் மரியாதையும் கூடியிருப்பதால் வடசேரியில் மட்டுமே இருநூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தத் தொழிலில் முழுமூச்சாய் இருக்கிறார்கள்.
கோயில் நகை செய்யும் தொழில் திறமைக்காக, ‘வாழும் கைவினை பொக்கிஷம்’ என தமிழக அரசால் விருதளிக்கப்பட்டவர் வடசேரி ராமச்சந்திரன். இந்தத் தொழில் குறித்து அவர் நம்மிடம் பேசினார். ”முன் பெல்லாம், திருவிதாங்கூர் அரசர் குடும்பத்துக்குத் தேவையான நகைகளும் இங்குதான் செய்யப்பட்டன. தமிழக கோயில்களுக்கு மட்டுமில்லாது, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருக்கும் கோயில்களுக்கும் இங்கிருந்து நகைகள் போகுது.
ஒரு செட்டில் 25 பொருட்கள்
கோயில் நகைகள் செய்வதுக்கும் மற்ற நகைகளைச் செய்வதுக்கும் வித்தியாசம் இருக்கு. கோயில் நகை களின் உருவத்தின் அடிப்படை வெள்ளியில் இருக்கும். அதன் மீது குச்சக் கல் என்னும் ஒருவகை கல்லைப் பதித்து அழகூட்டுவோம். அதன் மேல் 24 கேரட் சொக்கத் தங்கத்தின் இழையை வைத்துப் பொதிவோம். அதனால, இது ரொம்ப நுட்பமான வேலை. நெத்திச் சுட்டி, தலை சாமானம், மகரகண்டி மாலை, ராக்கொடி, மாங்காய் மாலை, ஜடை வில்லை, ஒட்டியாணம், தோடு, ஜிமிக்கி என ஒரு நகை செட்டில் 25 பொருட்கள் இருக்கும். பரதக் கலைஞர்களும் கோயில் நகைகளைப் போல் செய்துதான் பயன்படுத்துகிறார்கள்.
மத்திய அரசின் கைவினைத் துறையும், குமரி மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து எங்களுக்கான பிரத்யேக முகநூல் பக்கத்தையும் ‘வாட்ஸ் அப்’ குழுவையும் ஆரம்பித்துத் தந்துள்ளனர். இதனால், இப்போது இடைத்தரகர்கள் இல்லாமல் நாங்களே நேரடி வர்த்தகத்தில் இருக் கிறோம். எங்களது நகைகள் அமெரிக்கா, கனடா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளிலும் உள்ள பரதப் பள்ளிகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது” என்றார் ராமச்சந்திரன்.
தொழிலாளர்கள் இல்லை
தொடர்ந்து பேசிய அவரது மகன் சுவாமிநாதன், “எனது முப்பாட்டனார் செண்பகராமன் ஆசாரி, திருவிதாங்கூர் மன்னர்கள் காலத்தில் அரண்மனைக்கு நகைகள் செய் துள்ளார். அதற்காக அவருக்கு, ’உதயமார்த்தாண்ட தேவசேனாதிபதி’ என மன்னர் பட்டம் குடுத்தார். இப்போது, இந்தத் தொழில் உயிர்ப்பித்து இருப்பதற்கு அரசின் அனுசரணைதான் காரணம். முன்பு, இந்தியா வுக்குள் மட்டுமே நடந்த எங்களது வர்த்தகம் இப்போது உலகளவில் விரிந்துள்ளது” அதேசமயம், கோயில் நகைகளுக்கு நல்ல சந்தை வாய்ப்புகள் இருந்தாலும் போதிய அளவுக்கு அதற்கான தொழிலாளர்கள் இல்லை” என்றார்.
இவர்கள் இருக்கும் தெரு முழுக்கவே கைவினைக் கலைக்கு விருதுபெற்றவர்களின் வீடுகள், நிறைய இருக்கின்றன. கோயில் நகைகள் செய்யும் தொழி லுக்காக ஹரியாணா அரசால் கலாமணி விருதுபெற்ற முத்துசாமி நம்மிடம் பேசுகையில், ’’நாங்கள் சிறுபிள்ளையாக இருக்கும் போதெல்லாம் இந்தத் தொழிலுக்கு இவ்வளவு மதிப்பு இல்லை. அதனால், இதில் பலரும் நாட்டம் காட்டாம இருந்தாங்க. இப்ப, இந்தத் தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருக்கு; ஆனா, வேலை செய்யத்தான் ஆளில்லை” என்கிறார்.
படங்கள் உதவி: ராஜேஷ்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT