Published : 22 Sep 2017 11:16 AM
Last Updated : 22 Sep 2017 11:16 AM

பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகள்: அதீத விபத்துகளால் அல்லல்படும் பொங்கலூர்

'மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ எங்க ஊர் பேருந்து நிறுத்தத்தில் மாதத்திற்கு குறைந்தது பத்து விபத்துகளாவது நடக்காவிட்டால்தான் அதிசயம். அதை காவல்துறையினரே சரி செய்ய திணறுகிறார்கள்!' என தெரிவிக்கிறார்கள் திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் பொதுமக்கள்.

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் ,திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பதினாறு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொங்கலூரில் இயங்குகிறது. இந்த ஊரை கோவை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை இரண்டாக பிரிக்கிறது. இச்சாலையின் தெற்கு புறம் காட்டூர் கிராமச்சாலை பிரிகிறது. அந்த வழியே ஆரம்பப்பள்ளி உள்ளது. சாலைக்கு வடக்கு பகுதியில் மேனிலைப்பள்ளி உள்ளது. இந்த இரு பள்ளிகளிலும் முறையே சுமார் 300 மற்றும் 1300 மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

இந்த மாணவர்கள் மட்டுமல்லாது, கிராமத்து மக்களும் இந்த சாலையைக் கடப்பது அதிகமாக உள்ளது. நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் உட்பட தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. இந்த சாலை மாநில நெடுஞ்சாலையாக இருந்தவரை மிகக் குறுகலாக இருந்தது. வாகனங்கள் வேகத்தடைகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டும் வந்தது. இது சில ஆண்டுகளுக்கு முன்பு நாற்கர சாலையாக மாற்றப்பட்ட பின்பு வாகனங்களின் எண்ணிக்கையும், வேகமும் அதிகரித்து விபத்துகளும் அதிகமாக நடக்கிறது.

காட்டூர் செல்லும் கிராமத்து சாலைக்கு 100 அடி தொலைவில்தான் மேற்கு நோக்கி செல்லும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. அது கட்டப்பட்டதோடு சரி. எந்த பேருந்துகளும் அந்த நிறுத்தத்தின் முன்னே நிறுத்தாமல் 50 அடி முன்னாலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் காட்டூர் பிரிவிலிருந்து வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. பல முறை நகர பேருந்து, விரைவு பேருந்து ஓட்டுநர்களுக்கு இங்குள்ள பொதுமக்கள், போக்குவரத்து காவலர்கள் எடுத்து சொல்லியும் கேட்பதாகவே இல்லை என்கிறார்கள்.

இதுகுறித்து இப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீஸார் சிலர் கூறுகையில், ''போன மாதம் ஒருவர் டூவிலரில் வந்து விபத்தில் மாட்டி இதே இடத்தில் சுயநினைவற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் உள்ளார். அதற்கு அடுத்த வாரமே அதே இடத்தில் அவரின் சகோதரி ஒருவரும் விபத்தில் அகப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரும் சுயநினைவற்ற நிலையிலேயே இருக்கிறார். இது போல கடந்த சில வருடங்களில் மட்டும் கணக்கிலடாங்காத விபத்துகள். இங்கு எங்கள் போலீஸ் பலமும் மிகக் குறைவு. எனவே தனியாக இங்கே தொடர்ந்து பாரா போட வாய்ப்பும் இல்லை. அதனால் பேருந்து ஓட்டுநர்களிடம் எவ்வளவோ எடுத்து சொல்கிறோம். குறைந்த பட்சம் பேருந்துகளை அந்த நிழற்குடை பக்கத்திலாவது நிறுத்துங்கள். விபத்துக்குறையும் என தெரிவிக்கிறோம். யாருமே சட்டை செய்வதில்லை!'' என்றனர்.

இப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் சிலர் கூறுகையில், ''இங்கே இரவு நேரங்களில்தான் அதிக விபத்துகள் நடக்கிறது. பொதுமக்கள் அடிபடுவதும், அவர்களை ஓடிச் சென்று தூக்கி ஆம்புலன்ஸில் அனுப்பி வைப்பதுமே எங்களில் பெரும்பாலோருக்கு வேலையாக உள்ளது. இந்த இடத்தில் கோபுர விளக்கு கம்பம் அமைத்து 7 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்றைக்கு வரை என்ன காரணத்தாலோ இணைப்பும் தரவில்லை. அதை எரியவிட்டால் கூட அந்த வெளிச்சத்தில் இங்கே விபத்துகள் குறைய வாய்ப்புண்டு. அதையும் செய்ய மாட்டேங்கறாங்க!'' என தெரிவித்தனர்.

இந்த இடத்தில் நீண்ட நேரம் நின்று பார்த்தோம். வருகிற பேருந்துகள் எல்லாமே பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடைக்கு 50 அடி முன்னாலேயே சொல்லி வைத்தாற்போல் நிறுத்துவதைக் காண முடிந்தது. அங்கேயே பயணிகள் நின்று பேருந்து ஏறுவதையும் காண முடிந்தது. இங்கிருந்து தள்ளி உள்ள் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டிடத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டே தூங்குபவர்கள், ஓய்வெடுப்பவர்களே காணப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x