Published : 05 May 2023 08:20 PM
Last Updated : 05 May 2023 08:20 PM
சென்னை: "திமுக அரசு அமைந்த பிறகு ஒரு பேருந்தும் நிறுத்தப்படவில்லை. மகளிர் கட்டணமில்லா பயணம் மூலம் மகிழ்ச்சியாக பயணம் செய்கிறார்கள். புதிய பேருந்துகள் 4300 வாங்கப்பட இருக்கின்றன. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்பட இருக்கின்றன" என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்டணமில்லா பயணத்தின் மூலம் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை தமிழ்நாட்டு மகளிர் 277 கோடியே 13 லட்சம் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த கட்டணமில்லா பயணத்தின் மூலம் சேமிக்கும் பணம், அந்த ஏழை குடும்பங்களின் நலன் காக்க பயன்படுகிறது. இது தமிழக முதல்வருக்கு தமிழ்நாட்டு பெண்களிடத்தில் பெரும் ஆதரவை திரட்டியிருக்கிறது. பெரும் பேரையும், புகழையும் பெற்றுத் தந்திருக்கிறது.
இந்த பேரையும் புகழையும் கண்டு பொறுக்க முடியாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசின் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையில் பொய்யும் புரட்டுமாய் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். எடப்பாடி அறிக்கை முழுதும் உண்மைக்கு மாறான தகவல்கள். தங்கள் ஆட்சி கால தவறையும் தோல்விகளையும் மறைக்க இந்த பொய் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் எங்கேயும் பேருந்துகள் நிறுத்தப்படவில்லை. பேருந்துகள் நிறுத்தப்பட்டது என்பது கடந்த எடப்பாடி ஆட்சி காலத்தில் நிகழ்ந்ததுதான். அப்படி எடப்பாடி ஆட்சியில் பேருந்துகளை நிறுத்தியதற்கு காரணம் ஓட்டுநர், நடத்துனர்களை பணிக்கு எடுக்காததுதான். ஆமாம், கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு ஓட்டுநர் நடத்துனர் கூட வேலைக்கு சேர்க்கப்படவில்லை. இதனால் ஓட்டுநர், நடத்துனர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் 2000 வழித்தடங்களை எடப்பாடி ஆட்சியில் முடக்கிவிட்டனர். ஆனால் இதை கரோனா மீது கணக்கு எழுதிவிட்டார்கள். கேட்டால் கரோனாவால் பேருந்து நிறுத்தப்பட்டது என்று கதை விடுகிறார்கள். அது உண்மையல்ல.
அப்படி எடப்பாடி ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தை இயக்குவதற்கு தான் தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள், இதனை அறியாத மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். இதை கேள்விப்பட்ட தமிழக முதல்வர், பொதுமக்கள் கோரிக்கை வைத்த வழித்தடத்தில் பேருந்தை இயக்குவதற்கு ஆணையிட்டிருக்கிறார். அந்த தென்காசி - வாடியூர் வழித்தடத்தில் 06.05.2023 முதல் பேருந்து இயக்கப்பட இருக்கிறது.
அதிமுக ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி சென்றுள்ள கடன் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை தாங்கிகொண்டுதான், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கி வருகிறார் தமிழக முதல்வர்.மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள 2021-2022 ஆண்டுக்கு ரூபாய் 1,216.83 கோடி ஒதுக்கினார். 2022-2023 ஆண்டுக்கு ரூபாய் 2,546.63 கோடியும், 2023-2024 ஆண்டுக்கு ரூபாய் 2,800 கோடி ஒதுக்கியுள்ளார் தமிழக முதல்வர். அதேபோன்று புதிய பேருந்துகள் 2,000 வாங்கவும், பழைய பேருந்துகள் 1,500 சீரமைக்கவும் என மொத்தம் ரூபாய் 1,000 கோடி ஒதுக்கியுள்ளார்.
ஆனால் இதை மறைத்து போக்குவரத்துத்துறைக்கு தமிழக முதல்வர் நிதி ஒதுக்காததுபோல் பொய் பிரச்சாரம் செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. பேருந்து வாங்க நிதி ஒதுக்கினால், அதற்கு ஒப்பந்தபுள்ளி அறிவித்து, டெண்டர் விட்டு, அதில் நிறுவனங்கள் கலந்துகொண்டு விலைபுள்ளி அளித்து, அதில் தேர்தெடுக்கப்பட்டு, பணி ஆணை வழங்கிய பிறகுதான் நிறுவனத்தார் பேருந்துகளை தயாரிப்பார்கள். இந்த கால அவகாசம் முதல்வராக இருந்தவருக்கு தெரியாமல் இருக்காது. ஆனால் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லவேண்டுமென பொய் மூட்டைகளை அறிக்கையாக அவிழ்த்து விடுகிறார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு பொங்கல் மற்றும் தீபாவளி திருநாட்களில் எந்தவித சலசலப்பும் இல்லாமல் போராட்டமும் இல்லாமல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு பொதுமக்கள் நிம்மதியாக சொந்த ஊருக்கு பயணம் செய்தார்கள். இதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாராட்டியோர் பலர்.கடந்த 29.04.2023 அன்று கோடை விடுமுறை விடப்பட்டதை ஒட்டி தமிழ்நாடு போக்குவரத்துத்துறை கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தது. வழக்கத்தை விட இரண்டு மடங்கு கூட்டம் அன்றைக்கு, உடனே மாநகர போக்குவரத்து கழகத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எதிர்பாராவிதமாக மக்களும் கார்களில் ஊருக்கு பயணமானதால் சாலையில் போக்குவரத்து நெரிசல். அதனால் பேருந்துகள் கோயம்பேடு பேருந்துநிலையம் வர தாமதமானது. ஆனால் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு, அதனை சரிசெய்து பொதுமக்கள் ஊருக்கு நிம்மதியாக சென்று சேர்ந்தார்கள்.
பிரேக்கிங் நியூஸ்களை தங்கள் சொந்த சேனலில் பார்த்துவிட்டு உண்மைநிலை தெரியாமல் அறிக்கை விடுவது ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு அழகல்ல. திமுக அரசு அமைந்த பிறகு ஒரு பேருந்தும் நிறுத்தப்படவில்லை. மகளிர் கட்டணமில்லா பயணம் மூலம் மகிழ்ச்சியாக பயணம் செய்கிறார்கள். புதிய பேருந்துகள் 4300 வாங்கப்பட இருக்கின்றன. பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்பட இருக்கின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி பொய்களை பரப்ப முயன்று, மக்களிடம் அவமானப்படாமல் ஒதுங்கியிருப்பது நல்லது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மகளிருக்கு இலவச பயணத்தை அறிவித்துவிட்டு, தமிழகம் முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையை அரசு குறைத்து உள்ளதாகவும், ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், இதுவரை ஒரு புதிய பேருந்தைக் கூட இந்த திமுக அரசு வாங்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT