Published : 05 May 2023 03:55 PM
Last Updated : 05 May 2023 03:55 PM
தஞ்சாவூர்: “தமிழகத்தில் இருந்து ஆளுநரை வெளியேற்றுவது தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் விரைவில் ஆலோசனை செய்யப்படவுள்ளது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் இன்று (மே 5) தியாகிகள் வாட்டாக்குடி இரணியன், சிவராமன், ஆறுமுகம், என்.வெங்கடாஜலம் ஆகியோரின் வரலாறு குறித்த ஆவணப் பட வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக ஆளுநர் போகிற போக்கில் பல உண்மைகளுக்கு மாறான செய்திகளை வெளியிட்டுள்ளார். சட்ட வரம்புகளுக்கு உள்பட்டுதான் ஆளுநர் செயல்பட முடியும். ஆனால், நம்முடைய ஆளுநர் அந்த வரம்புகளை எல்லாம் மீறி, அரசியல்வாதியைப் போன்று, ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிமட்ட தொண்டனைப் போல பேசுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆளுநர் உரை என்பது அவர்கள் எழுதிக் கொடுப்பதை எல்லாம் படிக்க முடியாது என்றும், அதில் பல பொய்யையும், புரட்டுகளையும், விளம்பரத்துக்காகவும் எழுதியுள்ளனர் எனவும், அதையெல்லாம் நான் படிக்க முடியாது என்றும் ஆளுநர் கூறியுள்ளார். ஆனால், அமைச்சரவையின் கூட்டு முடிவின்படி எழுதப்பட்ட உரையைத்தான் படிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. எனவே, அந்த உரையை மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ, படிக்க மறுப்பதற்கோ உரிமையில்லை என சட்டம் தெளிவாகச் சொல்கிறது. ஆனால், இதையெல்லாம் மீறி ஆளுநர், தான் சொல்வதுதான் சட்டம் என்பது போன்று பேசி வருகிறார்.
தன்னிடம் எந்தவிதமான மசோதாக்களும் நிலுவையில் இல்லை என ஆளுநர் கூறுகிறார். ஆனால், ஆளுநரிடம் 17 மசோதாக்கள் கிடப்பில் ஒப்புதல் இல்லாமல் காத்துக் கிடக்கின்றன என தமிழகத் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். இந்த அரசு வேண்டுமென்றே ஆன்மிகவாதிகளைக் காயப்படுத்துகிற வகையில் செயல்படுகிறது என சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதைக் கண்டிக்கிற முறையில் பேசுகிறார்.
சிதம்பரம் தீட்சிதர்கள் காலங்காலமாக குழந்தைத் திருமணத்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, தொடர்புடையவர்களைக் கைது செய்துள்ளனர். சட்டத்துக்கு விரோதமாக குழந்தைத் திருமணம் நடைபெறுவதை அரசு எப்படி வேடிக்கை பார்க்க முடியும். இதற்கு முன்பாக பல முறை புகார் கொடுக்க முயன்றபோது, நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தச் சட்ட விரோத நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் பேசியுள்ளார்.
ஆளுநரின் பேச்சு முழுவதும் அரசியல்வாதிகள் போன்றும், தமிழக ஆட்சித் தலைவர் என்கிற தளத்தை மீறி ஆட்சியின் மீதே விமர்சனங்களை சொல்வதாக மாறிக் கொண்டிருக்கிறார். அரசின் மீது பிரச்னை இருந்தால், அமைச்சர்களுடன், முதல்வருடன் நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம். ஆனால், பொது தளத்தில் பேட்டி அளிப்பது அரசியல் விழுமியங்களைக் கடந்த நடவடிக்கையாக உள்ளது.
இதே போக்கில் ஆளுநர் திரும்பத் திரும்பச் செயல்படுவதை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது. இது தொடர்பாக விரைவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி ஆளுநரைத் தமிழகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.
ஆளுநர் இவ்வாறு பேச மத்திய அரசுதான் காரணம். ஆளுநரைப் பற்றி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பல முறை புகார்கள் செய்தும், ஆளுநரை அவர்கள் கட்டுப்படுத்த மறுக்கின்றனர். பாஜக இல்லாத மாநிலங்களில் ஆளுநரைப் பயன்படுத்துவதைப் போன்று, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு தலைவலி கொடுக்க ஆளுநரைப் பயன்படுத்துகின்றனர்.
தொழிலாளர்களுக்கான 12 மணி நேர வேலை நேரம் என்ற மசோதைவை திரும்ப பெற வேண்டும் என தொழிற்சங்கங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து முதல்வரிடம் எடுத்து கூறியதை தொடர்ந்து அந்த மசோதாவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். இதை ஜனநாயக பண்போடு முதல்வர் அணுகியுள்ளார். ஆனால் திமுகவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே முரண்பாடு வந்துவிட்டது என கூறுவதை ஏற்க முடியாது. தவறுகளை சுட்டிக்காட்டி, சொல்ல வேண்டியதை சொல்கிறோம். அதேபோல் கூட்டணி என்பது பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அந்த இலக்கில் தான் நாங்கள் ஒன்றாக உடன்பட்டுள்ளோம்.
2024-ல் பாஜகவை வீழ்த்துவன் மூலம் தான் இந்திய சுதந்திரத்தை பாதுக்காக முடியும். இந்தியாவின் பண்பாட்டுத் தன்மையை பாதுகாக்க முடியும். மாநிலங்களின் உரிமையை பாதுகாக்க முடியும், பல மாநிலங்களின் பன்முகத் தன்மையை பாதுகாக்க முடியும், இவை அத்தனையும் சீரழிக்கிற கலாச்சாரத்தை அரங்கேற்றுகிற ஒரு ஆட்சியாக உள்ள பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மதசார்பற்ற சக்திகள் எல்லாம் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்” என்றார். நிகழ்வில் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT